வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முன்னிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெற உள்ளது.

வெள்ளி, 16 ஜூலை, 2010

ஜப்பானிய பல்தேசிய கம்பனி தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோரிடேக் பல்தேசிய கம்பனியின் தலைவர் ஹிடோஷி தனிமுரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

விமல் வீரவன்ஸ தொடர்ந்தும் அமைச்சர் பதவியில்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த அமைச்சர் பதவியில் விமல் வீரவன்ஸ தொடர்ந்தும் நீடிக்கிறார் என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டின.

செவ்வாய், 6 ஜூலை, 2010

பதவிக்காலத்தை நிறைவுசெய்த சுவிஸ் தூதுவர் ஜனாதிபதியிடம் விடைபெற்றார்.

இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவராக பணிபுரிந்த ரூத் பிளின்ட் அம்மையார் தனது சேவைக்காலத்தை பூர்த்தி செய்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் விடைபெற்றார்.

திங்கள், 28 ஜூன், 2010

யுத்தம் முடிந்த போதிலும் அரசியல் தீர்வுக்கு காலம் எடுக்கும்-ஜனாதிபதி

இறுதிக்கட்ட யுத்தம் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தபோதிலும், அதற்கான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு காலம் எடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

திங்கள், 7 ஜூன், 2010

இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதியை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் தீர்மானம்

இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு தமிழக எம்.பி.க்கள் குழு தீர்மானித்துள்ளது. இதற்காக அவர்கள் இன்று புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 16 மே, 2010

ஜூன் 8இல் ஜனாதிபதி இந்தியா விஜயம்




எதிர்வரும் ஜூன் எட்டாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 மே, 2010

இரு நாடுகளுக்கும் இடையில் உறவை பலப்படுத்த வேண்டும்-ஜனாதிபதி


இலங்கை மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என புதிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதன், 5 மே, 2010

புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்!


புதிய அமைச்சர்கள் நால்வர் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆறு பேர் இன்றைய தினம் (05) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஜெனரல் பொன்சேகா சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள தடை இல்லை - ஜனாதிபதி

ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதன், 13 ஜனவரி, 2010

இந்தியா இணங்கினால் பிரபாகரனின் தாயார் இந்தியாவிற்குப் போக முடியும்- ஜனாதிபதி!


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் (மனைவியின் தாயார்)விரும்பினால் இந்தியாவிற்குச் செல்ல முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா இணங்கினால் அவர்கள் இந்தியாவிற்குப் போக முடியும் என்று வெளிநாட்டு நிருபர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதிபிள்ளையும் மாமியார் திருமதி ஏரம்புவும் தமது எதிர்காலம் தொடர்பான திட்டம் எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆயினும் பிரபாகரனின் தாயாரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரபாகரனின் உறவினரான இராஜேந்திரன் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மரணமடைந்த பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற்றுள்ளதாக ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தவார முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியையின் போது பார்வதியும் திருமதி ஏரம்புவும் சமுகமளித்திருந்ததாகவும் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகவும் தமக்குக் கூறப்பட்டதாக ஜனாதிபதி கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஜனாதிபதி மகிந்தவின் வருகையை ஒட்டி யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு


ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கான இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருவதையொட்டி யாழ் நகரை அண்டிய பகுதிகளில் படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்த பாதுகாப்பு வளையங்கள் நேற்று சனிக்கிழமை காலை முதல் நிறுவப்பட்டுள்ளன.

யாழ் பேரூந்து நிலையத்தினை அண்டியுள்ள பகுதிகளில் சாதாரண உடையணிந்த படைப்புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை இவர்களின் நடமாட்டம் மூலம் அறிய முடிந்துள்ளது.

ஒரு சிலர் நீண்ட நேரமாக பேரூந்து நிலையத்தினுள் காணப்பட்டதுடன் வேறு சிலர் பேருந்துகளின் ஏறி சிறிது தூரம் சென்ற பின்னர் இறங்கி மீண்டும் பேரூந்து நிலையத்தினுள் தங்கிக் கொண்டமை இதை தெளிவுபடுத்தியுள்ளது.

இதேநேரம் தமிழ் மக்களின் புனித தலமான நல்லூர் ஆலயத்தினை அண்டியுள்ள பகுதியில் நேற்று மாலையின் பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு படையினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

திங்கள், 4 ஜனவரி, 2010

2010 முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஜனாதிபதி


இவ்வருட முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று களுத்துறையில் தெரிவித்தார்.

ராஜபக்ஷகள் மீது வைராக்கியம் வைத்தாலும் பரவாயில்லை. தாய் நாட்டின் மீது வைராக்கியம் வைத்து நாட்டைக் காட்டிக் கொடுக்காதீர்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டம் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் ஏற்பாட்டின் களுத்துறை வேனன்யு பெர்னாண்டோ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 21ம் திகதி தான் கிளிநொச்சி நகரம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த நாள் சிறப்புக்குரிய நாளாக விளங்குகின்றது. கிளிநொச்சியை விடுவிப்பது என்பது மஹிந்தவின் பகல் கனவு என்று அன்று பிரபாகரன் கூறினார். சர்வதேசத்தினதும் உள்ளூரிலுள்ள சிலரினதும் உதவியோடு கிளிநொச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமென பிரபாகரன் நம்பினார். அதனால் தான் எதிரணியின் சிலர் கிளிநொச்சிக்குச் செல்வதாக மதவாச்சிக்குப் போகின்றனர் என விமர்சித்தனர். அன்று பிரபாரனுக்காக குரல் கொடுத்தவர்களுடன் தான் புதிய கைகோர்ப்பு இடம்பெற்றிருக் கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவிருப்பவன் நானே. இந்த வெற்றியே உங்களது குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

இப்போதுள்ள பிரச்சினைகளை நாளைய மக்களுக்காக நாம் விட்டு வைக்க மாட்டோம். நாங்கள் ஏற்ற பொறுப்பை சரியாக நிறைவேற்றுபவர்கள்.

பயங்கர வாதத்தைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டிவிட்டு உங்களிடம் வந்திருக்கின்றேன். முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்வதே எமது அடுத்த இலக்கு.

இதற்குத் தேவையான சகல திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீதிகள் கொங்கிரிட் போட்டு செப்பனிடப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பயனாக உல்லாசப் பயணிகள் படையெடுக்கிறார்கள். முதலீட்டாளர்களும் வருகின்றார்கள். எமது நாட்டைவிட இருபது மடங்கு பெரிய ஆழ்கடல் வளமும் எம்மிடமுள்ளது. சகல வளங்களையும் பயன்படுத்தி நாட்டின் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதே எமது பிரதான இலக்காகும்.

இதேநேரம் இவ்வருட முடிவுக்குள் இரண்டு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.

இதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன. அரசாங்க ஊழியர்களுக்கென இம்மாவட்டத்திலும் பாரிய வீடமைப்பு திட்டங்கள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன. பேருவளை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இம்மாவட்டம் விரைவில் தொழில் சந்தையாகமாறும்.

கடந்த காலங்களில் நாட்டின் சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்துபவர்கள் இப்போது எமக்கு சேறுபூசுகின்றார்கள். எமக்கு எதிராக விமர்சனம்செய்ய எதுவிதமான காரணங்களும் இல்லாததால் இவ்வாறு சேறுபூசுகின்றார்கள். இட்லரின் கோயபல்ஸைப் போன்று பொய்களை அடிக்கடி கூறி அவற்றை உண்மைப்படுத்த முடியும் என்று இவர்கள் எதிர்பார்க்கி ன்றார்கள்.

இது ஜேர்மனி அல்ல இலங்கை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜேர்மனியரைப் போன்றவர்கள் நாமல்லர் என்பதை இந்நாட்டு மக்கள் எதிர்வரும் 26ம் திகதி நிரூபித்து காட்டுவார்கள். நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் நாம் பெரு வெற்றி பெறுவோம். இது உறுதியானது.

திங்கள், 28 டிசம்பர், 2009

இனிமேலும் மோசமான சம்பவங்களை வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ள ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் - புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி


வடக்கு முஸ்லிம்களின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான சம்பவங்கள் இனிமேலும் நடப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாநாடு புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இன்று பயங்கரவாத நிலை முற்றாக நீங்கியுள்ளதால் அதுபற்றிய எவ்வித அச்சமும் இன்றி தத்தமது சொந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேறி தமது இயல்வு வாழ்வைத் தொடரமுடியுமென தெரிவித்தார்.

உங்கள் பிறந்த மண்ணில் நிச்சயம் நீங்கள் குடியமர்த்தப்படுவீர்கள் எனத் தெரிவித்த ஜனாதிபதி உங்கள் மீள் குடியேற்றம் நடைபெறும் காலப் வெகுதூரத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

வேறு எவரும் உங்கள் காணிகளில் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அங்கு நீங்கள் தைரியமாகச் சென்று குடியேற வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நிச்சயமாக செய்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

வடக்கிலிருந்து 1990 களில் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் கடந்த 20 வருடங்களாக புத்தளம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பல சிரமங்களின் மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற ஏற்பாடு செய்து தருமாறு அவ்வப்போது பதவியிலிருந்த அரசதரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

புத்திஜீவிகளுக்கு விலங்கிடமாட்டோமென்கிறார் ஜனாதிபதி


புத்திஜீவிகளுக்கு விலங்கிட்டுச் சிறைவைப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்லவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புத்திஜீவிகளுக்கு விலங்கிட்டு சிறைவைப்பதன்மூலம், அவர்கள் கருத்துக்கள் வெளியிடுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் பல்கலைக்கழக உப வேந்தர்கள் உட்பட விரிவுரையாளர்களை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தி அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அங்கு தொடர்ந்து பேசுகையில் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் தமிழ்ச் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளுக்கு அழுத்தம் கொடுத்ததையும் இதன் காரணமாக எத்தனை பேராசிரியர்கள், கலாநிதிகள் பல்கலைக்கழக உப வேந்தர்கள் நாட்டை விட்டுச் சென்றனர் என்பதையும் அறிந்திருந்ததாக அவர்கூறினார்.

பயங்கரவாதிகள் இந்தப் புத்திஜீவிகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்த விதத்தை தெளிவாகப் பார்த்ததாகவும் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

திங்கள், 14 டிசம்பர், 2009

தனது 'கட் அவுட்'களை அகற்றுமாறு ஜனாதிபதி பணிப்பு


தனது சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் 'கட் அவுட்'களை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

முன் உதாரணமாக செயற்படுமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொணடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில்,

"பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் கட் அவுட்களையும் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினமான 17 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டார்.

தேர்தல் சட்ட விதிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

1981 ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறையின் 15ஆவது பிரிவுக்கும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கும் அமைய சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் 'கட் அவுட்'கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர் இவை காட்சிக்கு வைக்கப்படக் கூடாதென தேர்தல் சட்டம் கூறுகிறது. அந்தத் திகதிக்கு பின்னர் இவை கட்டாயமாக அகற்றப்படும்.

இதன்படி உடனடியாக இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலிருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

பொலிஸ் திணைக்களத்தில் புதிய சூழலென்கிறார் ஜனாதிபதி


இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தைப் பாதுகாத்து, கடமைகளை முன்னெடுக்கக்கூடிய சூழலைக் கடந்த நான்கு வருடங்களில் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கடந்த காலப்பகுதியில் பல்வேறு சுற்றறிக்கைகள் மூலம் பொலிஸாரின் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனினும் உயர்வு, தாழ்வு பேதங்களின்றித் தமது அரசாங்கம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பதவி உயர்வுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.