வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக லக்ஸ்மன் செனவிரத்ன எம்.பி சாட்சியம்

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான விசாரணைகளுக்கென நிறுவப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று காலை கடற்படைத் தலைமையகத்திலுள்ள இராணுவ நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

திங்கள், 26 ஜூலை, 2010

'வெள்ளைக்கொடி' விவகார வழக்கு நீதிமன்றில்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா கூறியதாக வெளியான பேட்டி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் வியாழனன்று நடைபெறவுள்ளது.

வெள்ளி, 2 ஜூலை, 2010

குமரன் பத்மநாதன் தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்- சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதன், 30 ஜூன், 2010

புதிய கட்சி ஆரம்பிக்க ஜெனரல் சரத் உத்தேசம்

ஜெனரல் சரத் பொன்சேகா, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தைத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநயகத்திடம் இன்று கையளித்துள்ளார்.

ஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. நிபுணர் குழுவைச் சந்திக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 28 ஜூன், 2010

ஜெனரல் சரத்தை இராணுவ வாகனத்தில் அழைத்து வருமாறு நீதிமன்றம் உத்தரவு

ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தனியான இராணுவ வாகனம் ஒன்றில் நீதிமன்றுக்கு அழைத்து வருமாறும் இன்று போல் சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வர வேண்டாமென்றும் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதன், 23 ஜூன், 2010

ஜெனரல் சரத்துக்கு விசேட பாதுகாப்பு : நீதிமன்றம் உத்தரவு

ஜனநாயகத் தேசிய முன்னணித் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 17 ஜூன், 2010

நாளைய யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் படையினர் ஆர்வம் இல்லை-பொன்சேகா

நாளை நடைபெறவுள்ள யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு இராணுவத்தினர் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

புதன், 16 ஜூன், 2010

23ஆந் திகதி சரத் பொன்சேகாவை நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு


இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 8 ஜூன், 2010

ஐ.நா சபையால் யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் சாட்சியமளிக்கத் தயார்-சரத் பொன்சேகா

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை மீதான யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாது இருப்பதற்காக வேண்டி அவ்விசாரணையின் போது சாட்சியமளிக்கத் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார

புதன், 12 மே, 2010

மேலதிக பாதுகாப்புடன் சரத் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் : நீதிமன்றம் உத்தரவு


இராணுவக் கட்டுப்பாட்டில் கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை இராணுவக் கட்டுப்பாட்டிலேயே மேலதிக பாதுகாப்புடன் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு தலைவராக சரத் பொன்சேகா

ஜே.வி.பி. இணைந்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் செயற்படவிருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

பொன்சேகாவுக்கு எதிராக இரு வாரங்களில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்


இரு வாரங்களில் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும். சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்,

"குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுக்களும் வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

ஹைக்கொப் நிறுவனத்தினூடாக இராணுவத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பில் மோசடி செய்தல், மோசடி செய்ய உதவி ஒத்தாசை அளித்தல், மோசடி செய்ய சதிசெய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவை தவிர, இராணுவத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயன்றது தொடர்பாகவும், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டமை தொடர்பாகவும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தனியார் வங்கியில் 75 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக வெளிநாட்டு நாணய நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும். உள்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதோடு இராணுவ நீதிமன்றத்தினால் தனியாக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இராணுவச் சட்டத்தின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சரியானதே என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறை தொடர்பில் எதிர்க் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்த தவறான பிரசாரங்களுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் தக்க பதில் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறு கோரி இதற்கு முன்னரும் பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உண்மையில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆனால் இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைவாக சரத் பொன்சேகா கைதாகியுள்ளதால் அவரை விடுதலை செய்யும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

சிவில் சட்டத்தின் கீழ் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வழக்கு விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் சில நாடுகள் கோரியுள்ளன.

இந்தக் கோரிக்கைகளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உரிய பதில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் போக்கு மாறியுள்ளது எனவும் எனவே, இலங்கையுடன் சர்வதேச நாடுகள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவேண்டும் எனவும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரசிடா செபர் தெரிவித்துள்ளார்" என்றார்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

பொன்சேகாவின் பணியாளர்கள் மேலும் 8பேர் இன்று விடுதலை


ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலக பணியாளர்கள் மேலும் 8 பேர் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டின் சாட்சியங்களும் நிரூபிக்கப்படவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் சம்பா ஜானகி, இவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு ஊழியர்கள் 11 பேர் உட்பட 14 பேர் கடந்த வாரம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

இராணுவ பொலிஸாரின் நீர், ஆகாரத்தை ஏற்பதற்கு ஜெனரல் பொன்சேகா மறுப்பு


இராணுவ பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ உட்கொள்ளாமல் 24 மணித்தியாலங்கள் பட்டினியில் இருந்துள்ளார்.

ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார்.

இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவ பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டையிலுள்ள கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஐ.தே.கவின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து உரையாடியுள்ளனர்.

கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது மனைவியும் சட்டதரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ ஆகிய இருவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே பார்த்துள்ளனர்.

ஜெனரல் பொன்சேகாவை பார்வையிடுவதற்கு அவரது குடும்ப அங்கத்தினருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குகின்ற நேரத்தில் மட்டுமே அவரை சந்தித்து கலந்துரையாட முடியும்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவிற்கு இராணுவ பொலிஸாரால் நீர், ஆகாரம் வழங்கப்பட்ட போதிலும் அவர் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை.

பசி பட்டினியில் இருந்த அவரை 24 மணித்தியாலங்களுக்கு பின்னர் அவருடைய மனைவியும் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் எடுத்து சென்ற உணவை உட்கொண்டுள்ளார். அத்துடன் தேவையான மருந்து மாத்திரைகளையும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பின்னரே ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மருந்தை உட்கொள்ளுமாறும் இல்லையே உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்று வைத்தியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். அந்த ஆலோசனையின் பிரகாரமே அவர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

ஜெனரலைச் சந்திக்கச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

"கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியின் 3ஆவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை நானும் அவரது மனைவியுமான அனோமா பொன்சேகாவும் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் சென்று சந்தித்தோம்.

அவருடன் இருவரும் சுமார் 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடியதுடன் மனத்தைரியத்தையும் ஊட்டினோம். எவ்விதமான அச்சமுமின்றி இருக்கின்ற அவர் தன்னை எவரும் இதுவரையிலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவ பொலிஸார் 10 பேரின் பலத்த கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் அவரை மீண்டும் சந்திக்க வேண்டுமாயின் மற்றுமொரு தடவை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அங்கிருந்த இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்" என்றார்.

புதன், 10 பிப்ரவரி, 2010

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்


சரத் பொன்சேகாவின் கைதானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் சத்தியாக்கிரகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு கண்ணீர்ப் புகை பிரயோகமும். தண்ணீர் பீச்சியடித்தலும் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியும் கம்புகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.

அதே வேளை, அவ்விடத்தில், ஆயுதங்கள் நிரம்பிய வாகனம் ஒன்று தரித்து நிற்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை சந்தித்தார் அவரது மனைவி


இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதற்கான அனுமதியைப் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருந்தது.

மேலதிக விபரம் விரைவில்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவின் மருமகன் தலைமறைவு


ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தானுக திலகரட்ண தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹைகொப் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த இருந்த நிலையில் அவர் தன்னைத்தானே தனியார் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஓர் விடயமாகக் காணப்பட்டது. இதேவேளை ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக தானுக திலகரட்ன நேற்றையதினம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய நிலையிலேயே தனியார் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளார். முன்னதாக சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரும் அமெரிக்கா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொன்சேகாவின் கைது தொடர்பில் நாளை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்


ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக நாளை புதன்கிழமை உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரத்தியேகமான சட்டத்திரணிகள் குழுவொன்று உரிய ஆவணங்களை தயார்படுத்தி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

பொன்சேகாவின் கைதினைக் கண்டித்து கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரிச் சந்தியில் நாளை முற்பகல் 11 மணிக்கு சத்தியாக்கிரக போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பயமுறுத்துவோர் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

தமது அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற செயல்களில் இறுதியாக தம்மை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு பாதுகாப்பளித்த 90 படைவீரர்களுக்கு பதிலாக தற்போது 4 பொலிஸ்காரர்கள் கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகளில் இருந்து சட்டரீதியாக வெளியேறிய 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், மற்றும் 2 கேணல்கள் தமக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சமபந்தப்பட்டவர்கள் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் தமது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்தும் உடைந்துபோய் உள்ளது. யாரும் பொலிஸிற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லமுடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைதுசெய்யப்படலாம். இந்தநிலையில் நாட்டில் அனைவரும் தமது பணிகளை உரியமுறையில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தமது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தானும் தமது குடும்பத்தினரும் ( மனைவி வெளிநாட்டில் படிக்கும் இரண்டு மகள்மார்) நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமானநிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் தமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்ததாக கூறிய அவர், இதன் போது அரசாங்கம் தன்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ கொலை செய்ய திட்டமிடுவதாக செய்தி தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.

எனினும் இதனை மறைப்பதற்காகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய தாம் திட்டமிட்டதான செய்தியை அரசாங்கம் பரப்பிவிட்டது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.