வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு தலைவராக சரத் பொன்சேகா

ஜே.வி.பி. இணைந்த ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவே கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் செயற்படவிருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜெனரல் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிப்பது தொடர்பில் கட்சி ஏகமனதாக தீர்மானம் எடுத்திருப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் பொன்சேகா அதில் தோல்வியடைந்ததையடுத்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். அத்துடன் அவர் ஜே.வி.பி. கட்சியைப் பிரதானமாகக் கொண்ட ஜனநாயக தேசியக் கூட்டணிக்கும் தலைவராக செயற்பட்டார்.
கடந்த நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களின் தொகை 39 ஆக இருந்தது. தற்போதைய அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அதிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதையடுத்து ஜே.வி.பி.யின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுகுமார திசாநாயக்க அக்கட்சியின் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஏழாவது நாடாளுமன்றத்திற்கும் அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவிருக்கின்ற புதிய நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்ளவுள்ளார் என்று ஜே.வி.பி- ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’