வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 25 ஜூன், 2012
செவ்வாய், 21 பிப்ரவரி, 2012
வியாழன், 22 டிசம்பர், 2011
வெள்ளி, 23 செப்டம்பர், 2011
வேட்பாளர்களை மாற்றக் கோரி ஜெயலலிதா வீடு முன்பு அதிமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டம்
திங்கள், 19 செப்டம்பர், 2011
ஜெ திடீர் பல்டி- கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்துக்கு திடீரென எதிர்ப்பு
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
சொத்துக் குவிப்பு வழக்கு அக். 20 இல் ஜெயலலிதா ஆஜராவார்
சனி, 20 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 27 நவம்பர், 2009
லிபரான் அறிக்கை கசிவு: ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்-ஜெயலலிதா

சென்னை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷனின் அறிக்கை வெளியி்ல் கசிந்தற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் முழுப் பொறுப்பு என்று என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய அறிக்கையை ஒரு வழியாக மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இன்றைய சூழ்நிலையில், இந்த ஆணையத்தின் முடிவுகள் படிப்பதற்கு மட்டுமே பயன்படக் கூடியதாக இருக்கும்.
இந்த ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு முறை அல்ல, பல முறை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், மதத்தில் அரசியல் புகுத்தப்பட்டதன் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி முறைகள் லிபரான் அறிக்கையில் கூறப்படவில்லை.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ஏதும் குறிப்பிடப்படவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பல கோடி ரூபாயை செலவழித்து 48 நீட்டிப்புகளின் மூலம் சுமார் 17 ஆண்டு காலத்திற்கு பிறகு பெறப்பட்ட அறிக்கை, உறுதியான பயனை அளிக்காமல் வெறும் சூட்டையும், தூசியையும் தான் கிளப்பி விட்டிருக்கிறது.
லிபரான் ஆணைய அறிக்கையில் அடங்கியுள்ள பொருள்களைக் காட்டிலும், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளுக்கு எப்படி கசிந்தன என்பதுதான் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விறுவிறுப்பான சூடான விவாதம்.
உண்மையைச் சொல்லப்போனால் அறிக்கை கசிவு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சல் குழப்பத்தினால்தான் நாடாளுமன்றத்தில் அறிக்கை அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்தத் தருணத்தில், லிபரான் விசாரணை ஆணைய அறிக்கை கசிவிற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அறை கூவல் விடப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமான ஒன்றாகும். ஆனால், அறிக்கை கசிவில் தனக்கு பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.
அறிக்கை கசிவு துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள சிதம்பரம், உள்துறை அமைச்சகத்திற்கு வெளியேதான் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்று கூறவும் முனைந்திருக்கிறார்.
சென்செக்ஸ் குறியீடு அபரிமிதமாக உயர்ந்த போது, அதற்கு காரணம் மத்திய நிதி அமைச்சராக தானே என்று மார்தட்டிக் கொண்டார். தன்னுடைய பொருளாதாரக் கொள்கைதான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார்.
ஆனால் வீழ்ச்சி ஏற்பட்டபோது, வசதியாக சந்தை மீது பழியை போட்டு ஒதுங்கிவிட்டார். இதே முறையைத்தான் லிபரான் அறிக்கை கசிவிலும் கடைபிடித்திருக்கிறார் சிதம்பரம்.
நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியுள்ள லிபரான் அறிக்கை கசிவு பிரச்சனை, கரும்பு விலை அவசரச் சட்டம், ஸ்பெக்ட்ராம் ஊழல், மீனவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடிய கடல் மீன் தொழில் வரைவுச் சட்டம், முல்லைப் பெரியாறு மற்றும் இதர முக்கியமான மக்களைக் பாதிக்கும் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது.
உண்மை நிலை என்ன வென்றால், முக்கியமான பிரச்சனைகளிலிருந்து 1992 பாபர் மசூதி இடிப்பு பிரச்சனைக்கு இந்த நாட்டின் கவனத்தை இந்த அறிக்கை கசிவு திசை திருப்பியிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மற்றும் தர்மசங்கடமான நிலையிலிருந்து மாறி, ஓங்கி குரல் கொடுக்கும் நிலைக்கு தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ள மத்திய அரசு மட்டும்தான் இந்த அறிக்கை கசிவின் மூலம் பயனடைந்துள்ளது.
இது சூழ்ச்சியுடன் வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிடப்பட்ட கசிவு லிபரான் அறிக்கையின் ஒரே ஒரு நகல் மத்திய உள்துறை அமைச்சரிடம் மட்டும்தான் இருந்தது. எனவே, இந்த கசிவிற்கு சிதம்பரம்தான் முழுப் பொறுப்பு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எனவே, இந்த கசிவுக்கு பொறுப்பேற்று சிதம்பரம் பதவி விலக வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சிதம்பரம் மீது உல்பா புகார் :
இந் நிலையில் வடகிழக்கு மாநில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆர்வம்
காட்டவில்லை என உல்பா குற்றம் சாட்டியுள்ளது.
'தனிநாடு கோரிக்கையையும், ஆயுதப் போராட்டத்தையும் கைவிட்டால்தான் எந்தவொரு அமைப்புடனும்
பேச்சு நடத்த முடியும். ஆனால், உல்பாவுக்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள மாட்டோம்' என்று மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் குறிப்பிட்டார்.
இதுகுறித்து உல்பா அமைப்பின் தலைவர் அரவிந்த ராஜ்கோவா வெளியிட்ட அறிக்கையில், 'பிரச்சனைக்கு ராணுவத் தீர்வைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்றால் அது குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் கெஞ்சவில்லை. வன்முறையைக் கைவிட்டு, சமமான அந்தஸ்துடன் அரசியல் தீர்வு காணவே விரும்புகிறோம்.
ஆனால், அமைதியான தீர்வைக் காண வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை என்பதையே அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சு காட்டுகிறது என்றார்.
வியாழன், 12 நவம்பர், 2009
தஞ்சாவூரில் எரிசாராய ஆலை : எதிர்த்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் எரிசாராய ஆலை திறக்க முயற்சிப்பதைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஒரத்தநாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மத்திய அமைச்சராக இருந்த போது தன்னுடைய நிறுவனங்களுக்காக 4.5 லட்சம் க்யூபிக் மீட்டர் வாயுவை மத்திய அரசிடமிருந்து பெற்ற டி.ஆர். பாலு, தற்போது தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், விவசாயத்தை பாதிக்கக் கூடிய, நீராதாரத்தை அழிக்கக் கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
பின்தங்கிய வடசேரி பகுதியில் தொழில் தொடங்கப் போவதாக ஊராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்ற வைத்திருக்கிறார் டி.ஆர். பாலு. இந்தத் தீர்மானம் மாவட்ட ஆட்சித் தலைவரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் மக்கள் முறையிட்ட போது,
"தீர்மானம் போடத்தான் அதிகாரம் உள்ளதே தவிர, தீர்மானத்தை ரத்து செய்ய அதிகாரமில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் தான் அதை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறி அவர் ஒதுங்கிக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி நிறுவனத்தில் தற்போது ஒன்பது ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளதாகவும், இந்த ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து எடுத்து பயன்படுத்தும் நீர் கழிவாக வெளியேற்றப்படும் என்றும், இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் எரிசாராய ஆலை தொடங்கப்பட்டால், ஆறே மாதத்தில் விவசாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும், விவசாயக் கிணறுகளிலும் நீர் முற்றிலும் வற்றிவிடும் என்றும், இதன் விளைவாக 5000 ஹெக்டயர் நிலங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் எதிர்ப்பை மீறி, பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் டி.ஆர். பாலுவைக் கண்டித்தும்-
விளை நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை கடுமையாக பாதிக்கக் கூடிய, சுவாச நோயை ஏற்படுத்தக் கூடிய எரிசாராய தொழிற்சாலை அமைய உறுதுணையாக இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும்-
மக்களின் நலன் கருதி எரிசாராய தொழிற்சாலை அமைய அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதன், 4 நவம்பர், 2009
மட்டமான எதிர்க் கட்சி தலைவர்கள்-முதலிடம் ஜெ.வுக்கு!

டெல்லி: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன.
மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.
ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.
தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.
பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.
இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் , இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.
அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.
தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.
மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
புதன், 21 அக்டோபர், 2009
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவிப்பு!

இந்தியா கோயம்புத்தூரில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்க போவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்துள்ளன. இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவலநிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று கேள்வியெழுப்பியுள்ள அ.இ.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் உலகத்தமிழ்மாநாடு நடத்த அனுமதி மறுத்ததாலேயே கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அவர் இப்படி மாநாடு நடத்துகிறார், எனவே தனது கட்சி அதனைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளார். அதைப்போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது கட்சியும் மாநாட்டைப் புறக்கணிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்புதான் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். உலகத்தமிழ் மாநாடு ஒரு கட்சி சார்பான நிகழ்வாக இல்லாவிட்டாலும், கடந்த காலங்களிலும், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாடுகளில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தும் உரிய அழைப்பில்லை எனக்கூறி கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள், 19 அக்டோபர், 2009
மன்மோகன் சிங் : அனுதாபப்படும் ஜெ!

திமுக பிரமுகர்களின் மகன்களுக்கு தொழில் ரீதியாக உதவி செய்யுமாறு உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்திய தூதருக்கு அமைச்சர் அழகிரியின் அலுவலகம் சிபாரிசு கடிதம் அனுப்பியது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
மேலும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் மன்மோகன் சிங் மீது அனுதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய இயலாது. பொருளாதார மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம், நிறுவனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் மூடும் அபாயம், தொழிலாளர் அமைதியின்மை, விண்ணை முட்டும் விலைவாசி, சீன ஊடுருவல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டகாசம், பாகிஸ்தான் என பல்வேறு பிரச்சனைகளை பிரதமர் கையாள வேண்டியிருக்கிறது.
அமைச்சரவை சகாக்களிடமிருந்து எந்தவிதப் பிரச்சனைகளும் இல்லாமல் அவர் ஆட்சி செய்யலாம். ஆனால், அதற்கு திமுகவினர் இடம்பெறாத அமைச்சரவையை அவர் நடத்த வேண்டும்.
திமுக அரசின் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி ஒருவழியாக டெல்லியில் அமர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் என்ற பொறுப்பை திடீர் என்று ஏற்ற பிறகு, தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கே அவருக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.
டெல்லி ரயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்த தமிழர்களுக்கு பிரயாணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்தும், கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு ஓடிபோய் உதவி செய்தும், தான் இத்தனை நாட்களாக கட்டிக் காத்து வந்த தெருச் சண்டைக்காரர் என்ற தோற்றத்தை மாற்றும் முயற்சியில் மனப்பூர்வமாக ஈடுபட்டு வருவதுபோல் தெரிகிறது.
“முதலீடு வாய்ப்புகள்” குறித்து கண்டறிய உஸ்பெகிஸ்தான் வரவிருக்கும் இரண்டு திமுக தலைவர்களின் மகன்களுக்கு உதவி செய்யுமாறு, அங்குள்ள இந்தியத் தூதர் பேராசிரியர் சையது மனல்ஷா அல்குவாத்ரிக்கு, அழகிரி அறிவுரை வழங்கிய சர்ச்சை தான் தற்போது ஊடகங்களில் மையமான விவாதப் பொருளாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 11ம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் இந்திய தூதருக்கு நேரிடையாகவே அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அழகிரியின் தனிச் செயலாளர் பிரதீப் யாதவ் கையொப்பமிட்ட அந்தக் கடித்தில், இந்தக் கடிதம் அமைச்சரின் அறிவுரைப்படி எழுதப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.கே.பி. சுந்தரம் மற்றும் முகுந்த் விஜயன் ஆகியோரின் வியாபார நோக்கங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் மதுரை மாவட்ட திமுக செயலாளரின் மகன். மற்றொருவர் மூன்று முறை திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.பழனிசாமியின் மகன்.
உஸ்பெகிஸ்தான் “முதலீடு செய்வதற்குரிய நல்வாய்ப்புகளை” கண்டறியவும், 2009 செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அங்குள்ள முக்கிய தொழிலதிபர்களை சந்திக்கவும் வர இருக்கும் இவர்கள் இருவரும் “புகழ்பெற்ற முதலீட்டு ஆலோசகர்கள்” என்று அவர்களைப் பற்றி புகழந்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யுமாறு தாங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள், அமைச்சரவை செயலகங்கள், அமைச்சர்கள் ஆகியோர் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்கள் அடங்கிய குறிப்பு மத்திய அமைச்சரவை செயலாளரால் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று சுற்றனுப்பப்பட்டது.
“இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களுக்கும் அல்லது வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரங்களுக்கும்” கடிதம் எழுத வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சலுகைகள் அல்லது உதவிகள் கேட்டு கடிதம் எழுத வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வழிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் அழகிரியின் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதம் அமைந்துள்ளது.
மேற்படி கடிதத்தில் அழகிரி கையொப்பம் இடவில்லை என்பதும், இரண்டு திமுக “வணிகர்களும்” உஸ்பெகிஸ்தான் செல்லவில்லை என்பதும் சர்ச்சைக்குரியவை. பிரச்சனை என்னவென்றால், அழகிரி தனது பாதங்களை டெல்லியில் பதித்துவிட்டார். இனி “அட்டாக் பாண்டிகளும்” “பாம் ரங்கநாதன்களும்” அழகிரியின் அமைச்சர் மாளிகையிலிருந்தே தங்களுடைய நடவடிக்கைகளை துவங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
தவறு செய்யும் தன்னுடைய சக அமைச்சரை உடனடியாக கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த பிரதமருக்கு ஒரு ஜோடி கைகளுக்கு மேல் தேவைப்படும்.
மத்திய அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அ.ராசா என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறான கொள்கை கடைபிடிக்கப்பட்டதன் விளைவாக ரூ. 60,000 கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இந்திய நாட்டிற்கு இவர் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்திய நாட்டிற்கு இழப்பு என்றால், யாரோ ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்பது தான் அதன் பொருள். சட்டத்திற்கு புறம்பாக ஆதாயம் அடைந்த அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் இருக்கிறது.
கறைபடிந்த அமைச்சர் ராசாவை மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பிரதமர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படினும், கருணாநிதியால் வலுக்கட்டாயமாக ராசா மத்திய அமைச்சரவையில் புகுத்தப்பட்டார்.
தற்போது, ஊடகங்களில் வரும் செய்திகளின்படி பார்த்தால், ராசாவின் கடந்த கால தீய நடவடிக்கைகளுக்கு தற்போது தகுந்த தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. ராசா செய்த தவறுகள் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மத்திய கண்காணிப்பு ஆணையத்தால் அனுப்பப்பட்டு இருக்கிறது.
நியாயமான, நேர்மையான புலன் விசாரணை நடைபெற வேண்டுமென்றால், ராசா மத்திய அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் தான் பிரதமர் மன்மோகன் சிங் சரியான, நியாயமான நடவடிக்கை யை எடுத்து இருக்கிறார் என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார் ஜெயலலதா.
ஞாயிறு, 11 அக்டோபர், 2009
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவை யார் அனுமதித்தது?: ஜெயலலிதா

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம்பெறாத எம்.பி.க்கள் குழுவை யார் அனுமதித்தது? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலையை நேரில் கண்டறிய முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடம்பெறவில்லை. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் யாரும் இடம் பெறவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகிய இவர்களில் ஒருவர்கூட இந்த குழு குறித்தோ அல்லது இலங்கை பயணம் குறித்தோ எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யார் தேர்வு செய்தது? இந்த சுற்றுப்பயணத்துக்கு யார் அனுமதி அளித்தது? இந்தக் குழு இந்தியா திரும்பியதும் கருணாநிதியிடம் அறிக்கை அளிக்குமா அல்லது நாடாளுமன்றத்திடம் அறிக்கை அளிக்குமா? உண்மையான முகாம்களை காண இந்த குழுவுக்கு அனுமதி அளிக்கப்படுமா?
இந்திய நாடாளுமன்ற குழு வெளிநாட்டுக்கு அனுப்பும் அதிகாரத்தை மாநில முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி எப்படி தானே கையில் எடுத்துக்கொண்டார் என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
முகாம்களில் அவதியுறும் இலங்கைத் தமிழர்கள் குறித்து அங்கிருந்து வரும் செய்திகள் அனைத்தும், தணிக்கை செய்யப்படுகின்றன. மனித உரிமை நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட இவர்களை காண அனுமதிக்கப்படுவதில்லை. இதுதான் உண்மை நிலை. இந்த சோகத்தை கருணாநிதி, கேலிக்கூத்தான நாடகமாக நிகழ்த்துகிறார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன், 7 அக்டோபர், 2009
கருணாநிதியின் அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சியில் ஜெ!!!
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், “முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதியளித்து மத்திய அரசின் சார்பாக அதிகாரபூர்வமான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்டினால் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கேரள அரசுக்கு மத்திய அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த அனுமதி அளித்து விட்டதாக ஒரு முறைக்கு இரண்டு முறை பகிரங்கமாக அறிவிக்கிறார்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது குறித்து ஜெயராம் ரமேஷ் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் பகிரங்கமாக அறிவிக்கிறார். இதைவிட என்ன ஆதாரம் கருணாநிதிக்கு தேவை என்று புரியவில்லை.
16.9.2009 அன்று நடைபெற்ற வன உயிரினங்களுக்கான தேசிய வாரியத்தின் நிலைக் குழுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இதை விட என்ன ஆதாரம் தேவை?.
அந்தக் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளைப் பார்த்து கருணாநிதியால் தெரிந்து கொள்ள முடியாதா?. ஆதாரத்தை கேட்டுப் பெற வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு முதல்வர் இது போன்று செய்தியை வெளியிடுவது நியாயமா என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக, கேரள அரசுக்கு சாதகமாக பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவை கூட, ஆதாரத்தைக் கூட கருணாநிதியால் பெற முடியவில்லை என்றால், ஏன் மத்திய அமைச்சரவையில் திமுக இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது?.
கருணாநிதியின் நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசை தட்டிக் கேட்கபயந்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
22.9.2009 அன்று கருணாநிதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடிதம் எழுதி 15 நாட்களுக்கு மேலாகியும், பதில் கடிதம் கூட மத்திய அரசு எழுதியதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே மத்திய அரசு நிச்சயமாக கேரள அரசுக்கு அனுமதி அளித்திருக்கும் என்று கருணாநிதி யூகித்துக் கொள்ள வேண்டாமா?.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்ற கேரள அரசின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது என, பல்வேறு அறிக்கைகளை ஆராய்ந்த பின் உச்ச நீதிமன்றம் தனது 2006ம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை சீர்குலைக்க வேண்டும், இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கேரள அரசு செயல்படுவதாக மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கை உட்பட பல்வேறு அறிக்கைகள் குறிப்பிடுவதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் காரணமாக அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு தேவையற்றது.
தமிழக அரசுக்கு சாதகமான அம்சங்கள் உச்ச நீதிமன்றத்தின் 2006ம் ஆண்டு தீர்ப்பிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கருணாநிதி நேற்று அறிவித்து இருக்கிறார். எது எப்படியோ, காலம் தாழ்த்தியாவது என்னுடைய கூற்றிற்கு மதிப்பளித்து ‘கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு வழக்குதொடரும்‘ என்று கருணாநிதி அறிவித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த அறிவிப்பு, இதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளில் அறிவிக்கப்பட்டது போல் அல்லாமல், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், உறுதியான செயல் வடிவம் கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அமைய வேண்டும் என்பதில் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
செவ்வாய், 6 அக்டோபர், 2009
தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன்? : ஜெயா கேள்வி
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தி.மு.க. சார்பில் அண்மையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில், 1984 முதல் தமிழகத்துக்கு வந்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதாக அறிவிப்பதால் அவர்களுக்கு கூடுதலாக எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமைத் தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியன்மர் மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமைத் தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்? 'நிரந்தரக் குடியுரிமை' என்ற தகுதி காரணமாக அவர்களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களில் இருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவி அவர்களுக்கு அளிக்கப்படுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், தங்கள் உறவினர்களுக்கு மத்தியில் மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். சொந்த மண்ணில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காக இலங்கையில் 30 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
இலங்கை அரசு அறிமுகப்படுத்தியதற்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
சனி, 3 அக்டோபர், 2009
தனக்குத் தானே விருது அளித்துக் கொள்ளும் கருணாநிதி - ஜெ.
யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதல்வரே, தனது தலைமையிலான அரசு வழங்கும் விருதை பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிறரை வற்புறுத்தி தனக்கு பாராட்டு விழா எடுக்கச் சொல்வது; துதிபாடிகள் மத்தியில் உலா வருவது தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச் சொல்லி புளகாங்கிதம் அடைவது; தனக்குத் தானே விருதுகளை அளித்துக் கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போது கூட, அண்ணாவின் படத்தை விட கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதாகைகள் தான் வழிநெடுகிலும் காணப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவிலும் சரி, அண்ணாவின் கொள்கைகளையும், பெருமைகளையும், புகழையும் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் மனம் குளிர வைக்கும் பேச்சுக்கள் தான் ஓங்கி ஒலித்தன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா? அல்லது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் குளிர வைக்கும் விழாவா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இது போதாது என்று திமுக சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான அண்ணா விருதையும் தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக் கொண்டார். ஏற்கனவே 2008ம் ஆண்டுக்கான பெரியார் விருதை கருணாநிதி பெற்றுக் கொண்டதும் தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்ததையும் அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதி குடும்பம் தான் திமுக என்று ஆகிவிட்ட நிலையில் விருதுகள் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை!.
கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் போதாது என்று தமிழக அரசின் விருதையும் தனக்குத் தானே பெற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி!.
அதாவது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதும் இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கே வழங்கப்பட்டிருக்கிறது.
யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சரே தனது தலைமையிலான மாநில அரசு வழங்கும் விருதைப் பெற்றுக் கொள்வது மரபு மீறிய செயல்!. உலகத்திலேயே இதுவரை யாரும் கடைபிடித்திராத நடைமுறை!. முறையற்ற செயல்!. இதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.
இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதை தனக்கு பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி! அடுத்த ஆண்டு தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டு என்பதால் தனது மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திரைப் படங்களில் ஏதாவது ஒரு துறையில் நுழைத்து, அவர்கள் பெரிய சாதனை புரிந்ததாக விளம்பரப்படுத்தி, அவர்களுக்கும் விருதுகளை பெற்றுக்கொடுத்து விடுவார்!.
அடுத்த ஆண்டு பாதி விருதுகள் கருணாநிதி குடும்பத்திற்குத் தான்!. விருதுகள் வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை கருணாநிதி தன்னுடைய நடவடிக்கையின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
கடுமையான மின் வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தினம் கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக கருணாநிதிக்கு உலகச் சாதனையாளர் விருது வேறு!.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது.
அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பல ‘சான்றிதழ்களை’ பெற்றவர் கருணாநிதி! உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்ததற்கு ‘சான்றிதழ்’, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்ததற்கு ‘சான்றிதழ்’, நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொது மக்களையும் தாக்கியதற்கு ‘சான்றிதழ்’, பந்த் நடத்தியதற்காக ‘சான்றிதழ்’ என பல ‘சான்றிதழ்களை’ அடுக்கிக் கொண்டே போகலாம்.
எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடை பிடிக்காமல், நதி நீர்ப் பிரச்சனைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர் கருணாநிதி யை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

















