
இந்தியா கோயம்புத்தூரில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்க போவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்துள்ளன. இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் அவலநிலையில் வாடும்போது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அவசியமென்ன என்று கேள்வியெழுப்பியுள்ள அ.இ.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் உலகத்தமிழ்மாநாடு நடத்த அனுமதி மறுத்ததாலேயே கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துகிறார், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே அவர் இப்படி மாநாடு நடத்துகிறார், எனவே தனது கட்சி அதனைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளார். அதைப்போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது கட்சியும் மாநாட்டைப் புறக்கணிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன்புதான் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். உலகத்தமிழ் மாநாடு ஒரு கட்சி சார்பான நிகழ்வாக இல்லாவிட்டாலும், கடந்த காலங்களிலும், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோது நடத்தப்பட்ட மாநாடுகளில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தும் உரிய அழைப்பில்லை எனக்கூறி கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’