வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வேட்பாளர்களை மாற்றக் கோரி ஜெயலலிதா வீடு முன்பு அதிமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டம்

வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, அதிமுக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டு முடித்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதில் பல வேட்பாளர்கள் குறித்து கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. ஈரோடு மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மல்லிகா பரமசிவம், விபச்சார வழக்கில் சிக்கியவர் என்று கூறி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி நகராட்சித் தலைவர் மற்றும் சிலவார்டு வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் வீடு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கட்சித் தலைமை அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி மாறி வந்தவர்களுக்கே கட்சியில் சீட் தரப்படுகிறது. இது அநியாயமானது என்று அவர்கள் கோஷமிட்டனர். இதேபோல சென்னை பட்டினப்பாக்கம், 173வது வார்டு வேட்பாளரையும் மாற்றக் கோரி அந்த வார்டைச் சேர்ந்த அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருக்கும், 37வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூருக்கு தொடர்பே இல்லாத சுரேஷ் என்பவரை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய அப்போது அசோக்குமார் என்கிற இளைஞர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தியதால் விபரீதம் தடுக்கப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு சீட்-பெண் அழுகை.. சென்னை புழல் ஒன்றிய அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ள சாமூண்டீஸ்வரி போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் முன் அழுது கொண்டே கூறுகையில், 18 வயதில் அதிமுகவில் சேர்ந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 24 மணி நேரமும் அதிமுகவுக்காக உழைத்துக் கொண்டிருந்ததால், என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. புரட்சி பாரதம் கட்சியில் இருந்து பார்த்திபன் என்பவர் அதிமுகவில் இணைந்துள்ளார். அவரிடம் 10 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு லோக்கலில் இருக்கும் அதிமுகவின் நிர்வாகிகள், அவருக்கு சீட் கொடுத்துவிட்டனர் என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’