வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 பிப்ரவரி, 2010

தங்காலையில் பொலிஸாருக்கும் ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்: 3 பொலிஸார் காயம்; 6 போ் கைது


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் தங்காலை நகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று முற்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியை அடுத்தே இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால் பிரதேசத்தின் பொது நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டதனாலேயே அவர்களை அவ்விடத்திலிருந்து கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தகவல் தருகையில் கூறியதாவது:

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முற்பகல் 10.15 மணியளவில் தங்காலை நகரில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததுடன் ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் அரசாங்கத்துக்கு எதிராகவுமான பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே வீதியோரமாக நின்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மேற்படி ஆதரவாளர்கள் பின்னர் பிரதான வீதியை மறித்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்களை வீதியோரமாக விலகி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினோம்.

இருப்பினும் அவர்கள் அதனை கருத்திற் கொள்ளாது பதாகைகளை தாங்கியிருந்த பொல்லுகளைக் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பொலிஸ் தரப்பில் மூவர் காயமடைந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைத்ததுடன் அவர்களில் அறுவரையும் கைது செய்தனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டோர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சனி, 13 பிப்ரவரி, 2010

ஜெனரல் சரத் கைது : குருணாகலில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம்


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐ.தே.கவின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாமல் கருணாரத்ன ஆகியோர் கலேபண்டார ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலவரங்கள் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சரத் கைது குறித்த ஆர்ப்பாட்டத்தில் அநுராதபுரத்திலும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட முறுகலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மற்றுமொரு குழுவினர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றைய குழுவினரைத் தாக்க முயற்சித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கவை.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

மகரகம ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தடியடிப் பிரயோகம்


மக்கள் விடுதலை முன்னணியினர் மகரமவில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்து களைத்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பிலும் காலி,மாத்தறை ஆகிய பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ங்களின்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்


ஊடக அடக்கு முறைக்கு எதிராக இன்று மதியம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஊடகவியலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு, உட்பட ஊடக அமைப்புக்கள் பலவும் இணைந்தே இநத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

"லங்கா ஈநியூஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் பிரகீத்தை விடுதலைசெய்" "லங்கா பத்திரிகை ஊடகவியலாளர் சந்தன சிறமல்வத்தையை விடுதலைசெய்" "ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை உடனடியாக நிறுத்து" "சுதந்திர ஊடகத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்து" போன்ற கோஷங்களை ஊடகவியலாளர்கள் எழுப்பியதைக் காணமுடிந்தது.

அண்மைக்காலத்தில் கொழும்பில் ஊடகவியலளார்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர ஊடவியலளார்களுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் தர்மசிறி லங்கா பேலி கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டிலுள்ள ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவந்து ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்க வேண்டும்" எனதெரிவித்தார் .

புதன், 3 பிப்ரவரி, 2010

லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தைச் சூழவுள்ள அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன. டி.பி.ஜயா மாவத்தை, யூனியன் பிளேஸ் உள்ளிட்ட சன நடமாட்டம் அதிகமாகவுள்ள பகுதிகளின் பிரதான பாதைகளும் மூடப்பட்டுள்ளன.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

லசந்த கொலை; எவரும் கைதாகவில்லை : கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்


ராஜகிரியவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் இதுவரை குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இதனைக் கண்டித்துத் தற்பொழுது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகிறது.

நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்து, எமது இணையத்தளச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

பள்ளிவாயில்முன் ஆர்ப்பாட்டம் : மருதானை முஸ்லிம்கள் எதிர்ப்பு


பள்ளிவாயிலை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என மருதானை முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு மருதானை பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அங்கு கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதன்போது அங்கு கூடிய அப்பகுதி முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஜனநாயகத்துக்காக இவர்களால் எவ்வாறு குரல்கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அங்கு விரைந்த மருதானை பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் இரு தரப்பினரையும் அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறினர்.

இந்நிலையில், அரசியல் லாபம் தேடுவதற்காக எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் பள்ளிவாயிலுக்கு முன்பாக நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.

சுகாதார அமைச்சுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்


மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கழிவுகள் தமது குடிநீரில் கலப்பதாக குற்றம் சுமத்தி அப்பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் குறித்து உடனடியாக சுகாதார அமைச்சு கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சுக்கு கையளித்தனர்.

சனி, 7 நவம்பர், 2009

மக்களே எழுச்சிகொள்ளுங்கள்" ஐ.தே.க சிலாபத்தில் பேரணி


அரசாங்கத்தின் தற்போதைய போக்கினை கண்டித்தும், இது தொடர்பாக பொதுமக்களின் விழிப்புணர்வின் அவசியத்தினை வலியுறுத்தியும் “மக்களே எழுச்சிகொள்ளுங்கள்" எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று சனிக்கிழமை புத்தளம் மாவட்டம் சிலாபம் நகரிலிருந்து முன்னேஸ்வரம் வரை பேரணியொன்றை நடாத்தியது.

சிலாபத்திலிருந்து பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இப்பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆகியோருடன் 300 பேர் வரையிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பேரணியின் நிறைவில் முன்னேஸ்வரம் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

வெள்ளி, 6 நவம்பர், 2009

பம்பலப்பிட்டிக் கடலில் இளைஞர் கொலை : நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்


- பம்பலப்பிட்டிக் கடலில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொலிஸாருக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் குற்றமிழைத்த பொலிஸாருக்குத் தகுந்த தண்டனை வழங்குமாறும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், "பம்பலப்பிட்டிக் கடலில் இடம்பெற்ற இந்தப் படுபாதகமான சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதற்கு அரசு பொறுப்புக் கூறவேண்டும்" என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் கோட்டை ரயில் நிலையம் முன்பாக சுமார் இரண்டு மணிநேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.




புதன், 28 அக்டோபர், 2009

டெம்பிள் டெரஸ் செல்ல முயன்ற மாணவர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தம்


ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் இன்று டவுண் ஹோலிலிருந்து டெம்பிள் டெரஸ் வரை செல்ல முற்பட்டபோது, கொள்ளுபிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சுமார் 2000 பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதை எதிர்த்தும் மாணவர்கள் மீது பொலிஸார் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும் மேற்படி பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

மாணவர்களின் ஆர்ப்பாட்டம் கட்டுமீறும் பட்சத்தில், கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்துவதற்குப் பொலிஸார் ஆயத்தமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

வியாழன், 1 அக்டோபர், 2009

ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய இன்று ஆர்பாட்டம் நடத்தியது.ஆர்ப்பாட்டட்த்தில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்

வியாழன், 24 செப்டம்பர், 2009

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் 27ஆம் திகதி மக்கள் பேரலை மாநாடு - ஐ.தே.க.


பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ஊழல் மோசடிகளை எதிர்த்தும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் "மக்கள் பேரலை' மாநாடு நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு கொழும்பு விஹாரமாதேவி பூங்கா திறந்த வெளியரங்கில் நடைபெறும் மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் பங்கேற்பார்கள் என்று ஐ.தே.க. வின் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அலரி மாளிகை இன்று அன்னதான மடமாக மாறி விட்டது. மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வீண் விரயம் செய்யப்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

முகாம் மக்களைப் பொறுப்பேற்கும் விண்ணப்பங்களை ஏற்கக் கோரி ஆர்ப்பாட்டம்


வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களை உறவினர்கள் பொறுப்பேற்பதற்கான விண்ணப்பங்களை ஏற்குமாறு கோரி வவுனியா செயலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்க விரும்புபவர்கள் அதற்கென மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் விபரங்களைத் தெரிவித்து வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்குமாறு ஊடக விளம்பரத்தின் மூலம், மீள்குடியேற்ற அமைச்சு கோரியிருந்தது. இதற்கமைய வவுனியாவில் உள்ள பலர் இதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வவுனியா செயலகத்தில் கையளித்து வந்தார்கள். கடந்த புதன்கிழமை முதல் இந்த விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவித்தல் பிரதேச செயலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் முகாம்களில் உள்ளவர்களைப் பொறுப்பேற்பதற்கு விரும்பிய பலர் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, இவ்வாறு ஏமாற்றமடைந்த பலர் நேற்று வவுனியா செயலகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திக்க வேண்டும் எனக் கோரிய போதிலும், அவ்வாறான சந்திப்பு இடம்பெறவில்லை.