
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் தங்காலை நகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நேற்று முற்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியை அடுத்தே இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால் பிரதேசத்தின் பொது நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டதனாலேயே அவர்களை அவ்விடத்திலிருந்து கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தகவல் தருகையில் கூறியதாவது:
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முற்பகல் 10.15 மணியளவில் தங்காலை நகரில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததுடன் ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் அரசாங்கத்துக்கு எதிராகவுமான பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே வீதியோரமாக நின்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மேற்படி ஆதரவாளர்கள் பின்னர் பிரதான வீதியை மறித்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அவர்களை வீதியோரமாக விலகி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினோம்.
இருப்பினும் அவர்கள் அதனை கருத்திற் கொள்ளாது பதாகைகளை தாங்கியிருந்த பொல்லுகளைக் கொண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பொலிஸ் தரப்பில் மூவர் காயமடைந்தனர்.
இதனையடுத்து பொலிஸாரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைத்ததுடன் அவர்களில் அறுவரையும் கைது செய்தனர்.
சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டோர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’