வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அறிக்கை இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்


ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த சாட்சி அறிக்கை இந்த வார இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.


சரத் பொன்சேகாவிற்கு எதிராக தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நோக்குமிடத்து நிச்சயமாக இராணுவ நீதிமன்றில் வழக்குத் தொடரப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக உயர் இராணுவ அதிகாரியொருவர் லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பணிப்புரைகளுக்கு அமைய சாட்சியங்கள் திரட்டுதல் மற்றும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இராணுவ சட்டத்தின் பிரகாரம் பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத்தினர் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புரிந்துள்ளனர் என ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்தே அவருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள முக்கியமான குற்றச்சாட்டாக கருதப்படுகிறது என்று நேற்று வெளியான வாரப் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன், அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்தவாறு இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் என்றும் அதற்கான சாட்சியங்களை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அந்த செய்திகளில் வெளியாகியிருந்தன.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் கீழ் இரண்டு வழக்குகள் தொடரப்படவுள்ளன என்றும் இது தொடர்பில் சட்டத்துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர் என்றும் வேறு சில செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இராணுவ சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக இராணுவ நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக சாதாரண நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்குமாக இரண்டு வழக்குகளே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’