
அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், 1984 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் தங்கி இருந்த பிரபாகரன், மற்றும் பாலசிங்கத்தை தான் சந்தித்து இலங்கை பிரச்சினையில் தீர்வு ஏற்படுத்த முயன்றதாக கூறியிருந்தார். இது தொடர்பாக தி.மு.க வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டது. அவர் பதிலளிக்கையில், பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ராகவன், புளொட் தலைவர் முகுந்தன் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரபாகரனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலையும் நானும் ஆஜராகி பிணை வாங்கிக் கொடுத்தோம். முகுந்தன் சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு, திருவான்மியூர் காமராஜர் நகரில் சிறிது காலம் பிரபாகரன் தங்கியிருந்தார். பின்னர், அடையாறு இந்திரா நகருக்குக் குடிபெயர்ந்தார். 1983 ஆம் இறுதியில் பாலசிங்கம் சென்னை வந்தார். நானும் பேபி சுப்பிரமணியன் என்ற இளங்குமரனும் அவரை இரண்டு வாரங்கள் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கவைத்தோம். அதன்பிறகு, பெசன்ட்நகர் வேளாங்கன்னி மாதா கோயில் அருகிலுள்ள வீட்டில் பாலசிங்கம் தங்கி இருந்தார். பின் அவர் அடையாறு இந்திரா நகரில் தங்கினார். ஆக, 83 க்குப் பிறகு அவர்கள் கோடம்பாக்கத்தில் தங்கவே இல்லை. பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோர் கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தபோது 1984 இல் சந்தித்து, இலங்கை பிரச்சினை குறித்து பேசியதாக நிதி அமைச்சர் சிதம்பரம் கூறுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 1980 தொடக்கத்தில் இருந்து பாண்டி பஜார் சம்பவம் வரை மயிலாப்பூர் சாலைத் தெருவில் நெடுமாறனின் பழைய வீட்டில் என்னுடன் பிரபாகரன் தங்கியிருந்தார் என்றார் அவர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’