வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 மார்ச், 2013

சர்வகட்சி மாநாட்டு கோரிக்கையை ஆதரிக்க முடியாது; ரணிலிடம் மனோ தெரிவிப்பு


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காக உடனடியாக ஒரு புதிய சர்வகட்சி மாநாட்டை அரசாங்கம் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையை ஏற்றுகொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ள மனோ கணேசன், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்க தலைவர்களின் கூட்டறிக்கையிலிருந்து தமது கட்சியின் பெயரையும், தனது பெயரையும் நீக்குமாறும் கோரியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் இடம்பெறும் கட்சி தலைவர்களின் பெயரில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2009ஆம் வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கை அரசாங்கமே முன்வந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, இந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களின் ஒப்புதலை பெற்று அரசியல் தீர்வு காணும் முயற்சியை முன்னெடுக்கும்படியும், கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றும் செயல்பாட்டை மே 31ஆம் திகதிக்கு முன் ஆரம்பிக்கும்படியும், இந்த நோக்கில் உடனடியாக சகல தரப்பினரையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாடு ஒன்றை கூட்டும்படியும் அரசாங்கத்தை நோக்கி கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க, விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜயசூரிய, ஹேமகுமார நாணயக்கார, சரத் மனமேந்திர, அருண சொய்சா, அசாத் சாலி, சிறிமாசிறி ஹப்பு ஆராச்சி, சுதர்ஷன குணவர்த்தன ஆகியோர் தமது கட்சிகளின் சார்பாக கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற எதிர்கட்சி எதிர்ப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் நமது கட்சியின் பிரதி தலைவர் நல்லையா குமாரகுருபரனும், நிர்வாக செயலாளர் ப்ரியாணி குணரத்னவும் கலந்துகொண்டார்கள். இதையடுத்து குறிப்பிட்ட கூட்டறிக்கை நகல் நமது கட்சியினால் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு நாம் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். இன்றைய ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டம் நடைபெறும் போதும், இதையடுத்து பொதுநலவாய தலைவர்களின் கூட்டம் இலங்கையில் இவ்வருட இறுதியில் நடத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளின் மத்தியிலும், இன்னொரு புதிய சர்வகட்சி மாநாடு, அரசாங்கத்துக்கு காலத்தை கடத்த இன்னொரு புதிய சந்தர்ப்பத்தை தரும் என நாம் நினைக்கின்றோம். எனவே இதை இன்றைய சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழலில் நமது கட்சியால் ஏற்றுகொள்ள முடியாது. வரலாறு முழுக்க இனப்பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சொல்லி இலங்கை அரசாங்கங்கள் பல்வேறு வட்டமேசை மாநாடுகளை நடத்தியுள்ளன. இந்த அரசாங்கமும் நடத்தியது. இவற்றை காலம் கடத்தும் முயற்சிகளாகவே தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். 13ஆம் திருத்தத்தையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நிறைவேற்றும் அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது. இவை இரண்டையும் நிறைவேற்றுகிறோம் என ஐ.நா மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திடம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். முதலில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் வட மகாணசபை தேர்தலை 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் நடத்த வேண்டும். இவற்றைத்தான் எதிர்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். இவை நிறைவேற்றபடாமல், புதிய ஒரு சர்வகட்சி மாநாடு நடத்தப்படுவதானது, இனவாத கட்சிகளுக்கு உள்ளேயிருந்து தேவையில்லாத வாய்ப்புகளையும், பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகளுக்கு வெளியிலிருந்து கூச்சல் எழுப்பும் தேவையில்லாத சந்தப்பங்களையும் அளிப்பதிலேயே முடியும். இதன்மூலம் இன்று இருக்கின்ற 13ஆம் திருத்தம், கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகள் என்ற இரண்டு ஆவணங்களையும்கூட இவர்கள் கூட்டு சேர்ந்து இல்லாமல் செய்வார்கள். எனவே இன்னொரு சர்வகட்சி மாநாடு என்ற யோசனையை இன்றைய சூழலில் நாம் ஏற்றுகொள்ள முடியாது. இதுவே ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு' என மனோ கணேசன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’