வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 மார்ச், 2013

மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எமது அரசின் நோக்கம் - அமைச்சர் தெரிவிப்பு


சுய பொருளாதாரத்தினூடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி மேம்படுத்தும் நோக்கிலேயே வாழ்வின் எழுச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.நல்லூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் தொழிற்துறை உபகரணத் தொகுதிகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்வின் எழுச்சி திட்டம் நாடு தழுவிய ரீதியில் அரசினால் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனூடாக பயனாளிகள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் அதனை வலுப்படுத்த வேண்டுமென்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டலுக்கு அமைவாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோஹண ராஜபக்ஷ அவர்களது நெறிப்படுத்தலுக்கு அமைவாகவும் எனது அமைச்சு வாழ்வின் எழுச்சித்திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே நடாத்தப்பட்ட வாழ்வின் எழுச்சி கண்காட்சியைப் பார்வையிட்டு, அதனூடாக நீங்கள் விரும்பிய தொழிற்துறையை மேம்படுத்தும் தொழிற்சார் உபகரணத் தொகுதிகள் வழங்கப்படும் நிலையில் இவற்றினூடாக நவீன முறையிலான உற்பத்திகளை முன்னெடுக்க முடியும்.

அத்துடன் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்புக்கள், மற்றும் குறித்த தொழிற்துறைகளை விரிவாக்கம் செய்து மேம்படுத்தும் வகையில் வங்கிகள் ஊடாக இலகுகடன் திட்டம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்படுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிடைக்கப்பெறும் தொழிற்துறைசார்ந்த உபகரணத்தொகுதிகளை விற்பனை செய்யவோ, கைமாற்றம் செய்யவோ வேண்டாமென வலியுறுத்திய அமைச்சர் அவர்கள், கிடைக்கப் பெற்றுள்ள அமைதிச் சூழலை உரிய முறையில் பாதுகாப்பதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதிலும் பயனாளிகள் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இன்றுள்ள அமைதிச் சூழலையும் மக்களையும் குழப்பும் வகையில் சில பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் இது குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’