
இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இன்று எதிரொலிக்கின்றன. விடுதலை புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட வேண்டுமென்ற பொதுவான இலக்கு, கடைசிகட்ட யுத்தத்தின் போது இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இருந்தது. இதனாலேயே பொதுமக்கள் இழப்புகளை பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல் யுத்தம் நடத்தப்பட்டது. பொது மக்கள் இழப்புகளை பற்றி, மேற்குலக நாடுகள் அந்த வேளையில் குரல் எழுப்பிய போதெல்லாம் இந்திய மத்திய அரசு, இலங்கை அரசின் பெரியண்ணனாக இருந்து, சின்ன தம்பியை காப்பாற்றியது. இது உலகம் அறிந்த உண்மை. அந்த வேளையில் இலங்கையில் யுத்தத்திற்கும், சமாதான அரசியல் தீர்வுக்கும் இடையில் தடையாக இருப்பது விடுதலை புலிகள் தான் என்றும், அந்த இயக்கம் அழிக்கப்பட்டால் இலங்கையில் சமாதான அரசியல் தீர்வு ஏற்பட்டுவிடும் என்றும், யுத்தம் முடிந்தவுடன் 13ம் திருத்தத்தை அமுல் செய்து அதை மேலும் முன்கொண்டு செல்ல இலங்கை அரசு தயாராக இருக்கின்றது என்றும், இந்திய அரசியல் தலைவர்கள் எங்களுக்கு சொன்னார்கள். ஆனால், இன்று யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்தும் இலங்கை அரசு எந்தவித அரசியல் தீர்வையும் தரவில்லை. அதுமட்டும் அல்லாமல், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருந்த இந்தியாவின் குழந்தை 13 ஆம் திருத்தம் முதற்கொண்டு உரிமைகளையும் வெட்டி குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பகிரங்கமாக ஈடுபட்டு, இந்தியாவின் கன்னத்தில் பலமுறை அறைந்துவிட்டது. எனவே இன்றைய சூழலில் இந்திய பெரியண்ணன், இலங்கை அரசை இனியும் காப்பாற்ற முடியாது. இந்த அரசை நம்பி வாழுங்கள் என எமக்கு ஆலோசனை செய்யும் நிலையிலும் இந்திய மத்திய அரசு இல்லை. இதையே இன்று தமிழகம் உட்பட இந்தியா முழுக்க வாழும் மக்கள் மத்தியில் உறுதியாக ஏற்பட்டுள்ள அபிப்பிராயம் வெளிப்படுத்துகின்றது. இந்த பொதுஜன அபிப்பிராயத்தை இன்று இந்திய மத்திய அரசு பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ மீற முடியாது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும் , உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’