வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளும். ஒருசில தமிழ் ஊடகங்களும் எமது சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளும். ஒருசில தமிழ் ஊடகங்களும் எமது சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஉயர்கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கவிதா Talent நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டியமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் இதற்காக உயர் கல்வி அமைச்சர் கௌரவ எஸ்.பி. திஸாநாயக்க அவர்களுக்கும், பிரதி அமைச்சர் கௌரவ நந்திமித்ர ஏக்கநாயக அவர்களுக்கும் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுணில் ஜயந்த நவரட்ன அவர்களுக்கும் இந்த நிழ்வின் ஏற்பாட்டாளர்களர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

"தொடுவானத்தின் மேல் நின்று உலகைக் காணக்கூடிய கல்விமான்களை உருவாக்குவோம்" என்ற மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது மஹிந்த சிந்தனைக்கு அமைவாக, கல்வித்துறை சார்ந்து மட்டுமன்றி கலை, இலக்கியம், இசை மற்றும் திரைக்கலைத்துறைகளிலும் எமது மாணவ சமுதாயத்தை ஈடுபடச்செய்து ஒரு முழுமையான கல்வி மான்களாக உருவாக்கும் அரிய நோக்கில் இந்த கவிதா Talent நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்குள்ளும் இலைமறை காயாக மறைந்திருக்க கூடிய பல்வகையிலான திறைமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும் நாளைய கலை இலக்கியத்துறை சார்ந்த படைப்பாளிகளை, கலைஞர்களை எமது சமுதாயத்திற்கு வழங்குவதற்கும் இது ஒரு சிறந்த களமாக அமையுமென நான் நம்புகின்றேன்.

இலக்கியம், மேடைநாடகம், திரைப்படம், இசை, நடனம், திரைக்கதை வசனம், சித்திரம், இலத்திரனியல் ஊடகம், புகைப்படம் போன்ற பிரிவுகளின் கீழ் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையில் போட்டிகளை நடாத்தி, அந்தந்தத்துறை சார்ந்து தேர்ச்சி பெற்ற நடுவர்கள் அடங்கிய குழுக்களின் மூலம் சிறந்த படைப்பாளிகளை, கலைஞர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதற்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன். இதன் பிரகாரம் முதலாம் பரிசாக 1இலட்சம் ரூபாவும், 2ம் பரிசாக 75,000 ரூபாவும் 3ம் பரிசாக 50,000 ரூபாவும் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியதுறை சார்ந்து இந்தளவிற்கு பாரிய பணப்பரிசில்களை வழங்கும் ஒரு நிகழ்வு இதுதான் முதல் தடவையாக நம் நாட்டில் நடைபெறுகிறது என நான் கருதுகின்றேன்.

பல்கலைக்கழக மட்டத்தில் பல சிறந்த படைப்பாளிகளை, கலைஞர்களை, கல்விமான்களை நாம் உருவாக்கியிருக்கின்றோம். என்றாலும் கடந்த கால அழிவு யுத்தமானது எமது மாணவர்களது ஆக்கத்திறன்களை அழிவுக்கு மட்டுமே பயன்படுத்தி இருந்தது.

ஆனால் இன்று தமது ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தி நிற்கின்ற மாணவ, மாணவிகளை இங்கு நாம் காணுகின்றோம். கடந்தகால இருண்ட யுகம் இன்றும் நீடித்திருக்குமானால் இவ்வாறான நிகழ்வுகளை எம்மால் கண்டிருக்க முடியாது.

எனவே, அந்த இருண்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்த எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எமது மக்கள் சர்பாக மீண்டும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்தகால அழிவு யுத்தம் காரணமாக எமது சமுதாயம் பல வழிகளிலும் பாரிய அழிவையே சந்தித்திருக்கின்றது. இன்றும் கூட சில சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளும். ஒருசில தமிழ் ஊடகங்களும் எமது சமுதாயத்தை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்வதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன. எமது மக்களின் அவல வாழ்க்கையில்தான் தங்களால் அரசியல் பிழைப்பு நடத்த முடியுமென இவர்கள் நம்பி செயற்படுகின்றார்கள்.  இதில் ஓர் அங்கம்தான் கடந்த நவம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்டது.

எனவே இவ்வாறான தீய சக்திகளை எமது மாணவ சமுதாயம் இனம் கண்டு, அழிவின்பால் தங்களது திறமைகளை வீண்விரயம் செய்யாது ஆக்கத்தின்பால் தமது செயற்ப்பாடுகளை முன்னெடுக்க முன்வரவேண்டும் என நான் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம், தென்கிழக்கு, கிழக்கு, மொரட்டுவ, கொழும்பு, சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களிலும் வவுனியா, திருகோணமலை வளாகங்களிலும் கற்புல அரங்காற்றல், பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பயிலும் மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர்.

சிங்கள மொழி மூலமான மாணவ மாணவியருக்காக நடாத்தப்பட்ட போட்டிகளுக்கு இணையாக, தமிழ் மொழி மூலமான இப்போட்டிகளும் நடாத்தப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். இவ்வாறான முயற்சிகள் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வுகளை வலுப்படுத்தி, நம்பிக்கையினை வளர்ப்பதற்கு பெரிதும் துணையாகும் என நான் நம்புகின்றேன்.

மக்களிடையே ஒழுக்கமும் மனித நேயமும் நிறைந்திருப்பின் நாட்டில் அமைதியும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையும் நிலவுவதற்கு அது சாதகமாக அமையும். அந்த வகையில் கலை, இலக்கியங்கள் இத்தகைய உணர்வுகளை ஊட்டி வளர்க்க உதவுகின்றன. எமது அடுத்த சந்ததியினரின் அமைதியுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்திற்கு உரிய மனித நேயப்பண்புகளை வளர்க்க கவிதா Talent நிகழ்வு பெரிதும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிகழ்வானது தொடர்ந்தும் நடாத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன் இதனூடக எமது சமுதாயத்திற்கு ஆற்றுகின்ற பங்களிப்பானது மிகவும் பாரியதாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இந்த அரிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள உயர் கல்வி  அமைச்சர் கௌரவ எஸ்.பி. திஸாநாயக்க, பிரதி அமைச்சர் கௌரவ நந்திமித்ர ஏக்கநாயக்க செயலாளர் கலாநிதி சுணில் ஜயந்த நவரட்ன அமைச்சின் விளையாட்டு மற்றும் திறன் அபிவிருத்திப் பிரிவின் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.















 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’