வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

மாணவி கைது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு


பாடசாலை மாணவி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நீதியமைச்சும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என ஜனாதிபதி பணித்துள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தினார். உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு கல்வியமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுச்சென்றிருக்காமல் இணக்கச்சபையின் ஊடாக தீர்வு கண்டிருக்கலாம். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிபரையோ இன்றேல் ஆசிரியரையோ கடமையிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் கல்வியமைச்சருக்கோ அமைச்சின் செயலாளருக்கோ இல்லை. பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றார். பாடசாலை கட்டிடங்களுக்கு நிறம் பூசுவதற்காக பாடசாலை நிர்வாகம் மாணவர்களிடம் 800 ரூபாவே கோரியுள்ளது. அதனை திரட்டிக்கொள்ள முடியாத மாணவி அருகிலுள்ள தென்னந்தோட்டத்தில் 8 தேங்காய்களை களவெடுத்துள்ளார். அந்த மாணவியை குற்றவாளியாக இனங்கண்ட ஹொரணை நீதவான் நீதிமன்றம் அவரை 50 ஆயிரம் ரூபா பிணையில் விடுதலைச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’