நாட்டில் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரையில் தாக்குதலுக்குட்பட்டிருக்கவில்லை அவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கரிப்பதாக அரசாங்கம் கூறுவதை எண்ணி நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அசாத் சாலியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரையில் தாக்குதலுக்குட்பட்டிருக்கவில்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறு அரசாங்கம் கூறியுள்ளதை பார்த்து முஸ்லிம் சமூகம் வெட்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் விவாதம் கொண்டு வரப்பட்டது. இதன்போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கூற்று ஒன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
ஆனால் முஸ்லிம் அமைச்சர், எம்.பி.க்களுடன் ஆளுந்தரப்பினர் கதைத்து விட்டு மறுநாளே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் முஸ்லிம் அமைச்சர்கள் சபையில் இருக்க இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அமைச்சரினால் பதிலளிக்கப்பட்ட கூற்றை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்.
அரசாங்கத்தில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருமுகத்தை வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார். இந்த விடயத்தில் அரசாங்கம் சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி பொது பலசேனா என்ற அமைப்பை வைத்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதை ஆண்டவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.
அநுராதபுரத்தில் அண்மையில் உடைக்கப்பட்ட பள்ளிவாயல் பாதுகாப்பு பிரிவினர் முன்பாகவே உடைக்கப்பட்டது. இதனை பாதுகாப்பு பிரிவினர் கை கட்டி வாயில் கை வைத்துக் கொண்டு எதுவும் தெரியாதவர்கள் போன்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது நாட்டில் ஒரு பள்ளிவாயல் கூட உடைக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகின்றது.
எனினும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கதைத்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’