வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மகிழ்ச்சியின் எழுச்சி பொங்கும் சூழலை தைப்பொங்கல் திருநாள் நீடித்து வழங்கட்டும்.


மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில், பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் எமது மக்களின் மனங்களிலும், எமது வரலாற்று வாழ்விடங்களிலும் மகிழ்ச்சியின் எழுச்சியை நீடித்து வழங்கட்டும் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த வாழ்த்து செய்தியில்,... எமது மக்கள் காண விரும்பும் மகிழ்ச்சியானது வன்முறைகள் அற்ற வாழ்வும், அமைதி தரும் சூழலும் மட்டுமல்ல,.. பிறந்திருக்கும் அமைதி தரும் சூழலை அர்த்தமுள்ள ஆரம்பமாக கொண்டு, வாழ்வின் இலட்சிய கனவுகளை நோக்கிய சகல உரிமைகளையும் பெற்று மேலும் நிமிர்ந்தெழும் காலம் ஒன்றே எமது மக்களின் மகிழ்ச்சியாகும். அதற்கான நம்பிக்கைகளும், உழைப்பும் இங்கே விதை விதைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அறுவடை செய்யும் காலமும் கனிந்து கிடக்கின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது எமது முன்னோர்களின் முது மொழி. தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் எமது மக்களுக்கு இதுவே நம்பிக்கை தரும் உறுதி மொழியும். கடந்து போன ஆண்டுகள் மாற்றங்களை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் யாவுமே தவறவிடப்பட்ட காலங்களாகவே கழிந்து சென்றன. ஆயினும், இனி வரும் காலச்சூழலில் இனியொரு விதி செய்வோம் என்ற எதிர்கால நம்பிக்கையோடு தைப்பொங்கள் திருநாளை வரவேற்போம். மாற்றங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்தும் எத்தனிப்போர் குறித்து விழிப்புடன் இருப்போம். சூரியனுக்கு நன்றி செலுத்தி, உழைப்பின் வியர்வைத்துளிகளை பயன்களாக அறுவடை செய்ய தைப்பொங்கல் திருநாளில் நாம் எழுவது போல்,... மகிழ்ச்சி தரும் வரலாற்று மாற்றங்களுக்காக இது வரை சிந்தப்பட்ட உழைப்பின் பயன்களையும் நாம் எமது மக்களுடன் இணைந்து அறுவடை செய்து நிமிர்வோம். இவ்வாறு தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சீரற்ற இயற்கையின் காலநிலை தந்த அசௌகரியங்கள், இடர்களுக்கு மத்தியிலும் தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’