இரத்தினபுரி-கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்கள் சேவல் சின்னத்திற்கும், மட்டக்களப்பு-திருகோணமலை-அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்கள் வீட்டு சின்னத்திற்கும் வாக்களித்து, நமது இனரீதியான இருப்புகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, மலையக தமிழ் மக்கள் குறைந்தளவு வாக்கு பலத்தை கொண்ட மாவட்டங்களில் பெரும்பான்மை கட்சிகளுக்கு தமது வாக்குகளை அளித்தமையாலும், மலையக தமிழ் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டமையாலும், சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் கடந்த காலங்களில் மலையக தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய முடியாமல் போய்விட்டது என மலையக தமிழ் சிவில் சமூகம் சுட்டி காட்டியுள்ளது. இந்த படிப்பினையை அடிப்படையாக கொண்டு சப்ரகமுவ தமிழ் வாக்காளர்கள் மலையக தமிழ் கூட்டமைப்பின் பொது சின்னமான சேவல் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல் மேலாதிக்கவாத சிந்தனைகளுக்கு எதிராக அணிதிரண்டு, தமது அரசியல்-சமூக-கலாச்சார இருப்பை உறுதி செய்துகொள்ளும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்துக்கு கிழக்கு மாகாண தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். சப்ரகமுவவிலும், கிழக்கிலும் தமிழ் வாக்காளர்களின் இனவுணர்வு ஆதரவு அலை அடித்தால் மட்டும் போதாது. வாக்காளர்களாக பதிவுகளை கொண்டுள்ள அனைத்து தமிழ் வாக்காளர்களும் தமது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இந்திய அரசியலமைப்பின்படி அந்நாட்டில் சிறுபான்மை மக்கள் பிரிவினருக்கு தேர்தல் தொகுதி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தொகுதிகளில் குறிப்பிட்ட சிறுபான்மை பிரிவினரே போட்டியிட முடியும். இதன்மூலம் அந்நாட்டில் அனைத்து இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இலங்கையில் இத்தகைய முறைமை கிடையாது. இங்கே இனரீதியாக ஆசன ஒதுக்கீடுகள் கிடையாது. இங்கு நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையின் கீழ் அனைத்து தமிழ் வாக்காளர்களும் தத்தமது மாவட்டங்களில் தவறாமல் வாக்களித்தால் மாத்திரமே எமக்கு உரிய தமிழ் இன பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுகொள்ள முடியும். இரண்டு அல்லது மூன்று இனங்கள் கலந்து வாழும் இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்குரிமையுள்ள தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாவிட்டால், எமக்கு உரிய இடம் ஏனைய சகோதர இனத்தவர்களுக்கு சென்று விடும். நாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளாததால், எமக்குரிய இடம் காலியாக இருக்காது. தமிழர் வாக்கு விகிதம் அதிகரிக்க, அதிகரிக்க எமது பிரதிநிதித்துவ ஆசனங்கள் அதிகரிக்கும். இந்த அற்புதமான உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 24 ஆசனங்களில், இரண்டு தமிழ் மக்களுக்கு உரியது. அதற்கு அமையவே நாம் எமது தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளோம். ஆனால் தமிழ் வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்காவிட்டால், எமக்குரிய ஆசனகளையும் பெரும்பான்மை பிரதிநிதிகள் பெற்றுக்கொள்வார்கள். இந்த உதாரணம், கேகாலை மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். இதை வாக்குரிமையுள்ள தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பில் தெளிவு உள்ள ஆசிரியர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இந்த அடிப்படை உண்மையை ஒரு கடமையாக கருதி ஏனையோருக்கு தெளிவு படுத்தி அனைத்து தமிழர்களையும் வாக்களிப்பில் கலந்துகொள்ள செய்ய வேண்டும். தவறாமல் வாக்களிப்பில் கலந்துகொண்டு சப்ரகமுவ மாகாணத்தில் சேவல் சின்னத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் வீட்டு சின்னத்திற்கும் வாக்களித்து எமது இனத்தின் இருப்புகளை நாம் வாழும் மாவட்டங்களில் உறுதி செய்வோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’