கி ழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நீல நிறச்சட்டை அணிந்தவர்கள் பலர் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களை கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வருவதாக தமக்கு புகார்கள் கிடைத்துள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொலைபேசி ஊடாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இரா. சம்பந்தன் முறையிட்டுள்ளார். அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்களார்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்தும் படியும் தேர்தல் ஆணையாளரிடம் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் நீல நிற சட்டைக்காரர்கள் இவ்வன்முறைகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆளும் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் பின்னர் விபரீதங்களை சந்திக்க வேண்டிவரும் என்று தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் எச்சரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தேர்தல் ஆணையாளரிடம் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திலும் பல கிராமங்களில் சிலர் சென்று ஆளும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பயமுறுத்தி வருகின்றனர் என்று தமக்கு முறைப்பாடு வந்திருப்பதாகவும் தேர்தல் ஆணையாளரிடம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’