கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தினை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுதன் மூலம் கைப்பற்றப்போகின்றது என்ற செய்தியினால் அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது என நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இளைஞர்களுக்கு விளக்கமளிக்கும் முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாடு சம்மாந்துறை விளினையடிப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கிழக்கு மாகாண தேர்தல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பிரசாரம் செய்யும்போது அதனை அரசாங்கம் இனவாதத்தினை தூண்டுவதாகக் கூறுவதுடன், எனக்கு எதிராக இன்று அரசாங்க ஊடகங்கள் தாறுமாறாக விமர்சிக்கின்றன. இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை அமைச்சுப் பதவியை பணயம் வைத்துக் கேட்கப்படும் தேர்தலாக மாறியுள்ளது. அவ்வளவு தூரம் இன்று இந்த தனிப்பெரும் அரசியல் இயக்கம் மத்திய அரசாங்கத்தின் பலமாக இருக்கின்ற அரசாங்கத்துக்கு மாநிலத்தில் மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸினால் முடக்கிவிடப்பட்டுள்ள பிரசாரங்களின் நேர்மையினை புரிந்துகொள்வதற்கும் அதனை ஜீரணிக்கின்ற பக்குவமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது அரசாங்க ஊடகங்களின் பிரசாரங்களைப் பார்க்கின்றோம். ஆனால் இந்த ஜீரணிக்கின்ற அரசியல் பக்குவம் அரசாங்கத்துக்கு வரவேண்டும். அடுத்த கட்ட அரசியலை நேர்மையாக செய்கின்ற பக்குவம் தமிழ்த் தேசியத்திற்கு வரவேண்டும். இதற்காக நாம் பிரார்த்திக்கவேண்டும். தமிழ்த் தேசியத்தின் அரசியலில் இன்றுவரையும் அமைச்சுப் பதவிகளுக்கு சோரம்போகாது, அவர்களின் தனித்துவத்தினை பாதுகாத்துவருகின்றனர். ஆனால், முஸ்லிம் தேசிய அரசியலில் மிகப் பெரும் சவாலாகவுள்ள விடயம் அமைச்சுப் பதவிகள் இல்லாமல் கட்சியினை நடத்தமுடியாத நிலைமை உள்ளது. இதுதான் இன்றைய முஸ்லிம் கட்சிகளின் நிலைமை ஆகும். எங்களுடைய தனித்துவமான அரசியலை அடகுவைக்க வேண்டும். அதனை முஸ்லிம்களிடமிருந்து பறிக்கவேண்டும் என்பதற்காக காலம்காலமாக பேரினவாத சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சதி முயற்சிகள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அதன் பின்னரும் அரங்கேறியும் அரங்கேறவும் உள்ளன என்பதனை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் கிழக்குத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவமான அந்தஸ்தினை இல்லாமல் செய்வதற்கான எந்தச் சதியையும் செய்யலாம். அதற்காக தலைமைத்துவத்திற்கு கட்டுப்பவதற்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல வேட்பாளர்களும் உலமாக்கள் முன்னிலையில் பையத் (உடன்படிக்கை) செய்துள்ளனர். அடுத்த ஒரு சில தினங்களில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களும் பையத் செய்யவுள்ளனர். எனவே, முஸ்லிம்களின் தனித்துவத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்தும் ஒரு தேர்தலாக மாறியிருக்கும் இந்த மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு தமது வாக்குப் பலத்தினை வழங்கினால் மாத்திரமே நாம் இழந்து போன உரிமைகளை வென்றெடுக்க முடியும். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது' என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் காலி, மாகாணசபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’