இ லங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும்,
நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி அளி்க்க அனுமதி அளித்த பொறுப்பு அதிகாரியை தாற்காலிக பணிநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை இராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்து மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. அண்மையில், இரண்டு இலங்கை இராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு சிறிதும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இது போன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை ராயல் கொலேஜ் ஆப் கொழும்பு நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்பேரில், அந்த அலுவலர் அதற்கான ஏற்பாட்டை செய்ததாகவும், கடந்த ஓகஸ்ட் 30 இல் தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் மறுநாள் சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரியை அணுகியதாகவும், அந்த பொறுப்பு அதிகாரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது. நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு தான் அந்த அதிகாரம் உள்ளது. தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப் படுத்தியுள்ளார். எனவே, அந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, இரத்தினபுரியை சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’