வ வுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து உயிரிழந்த கைதிகளான நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷனின் மரணங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா சிறைச்சாலை மீதான தாக்குதல் மற்றும் இவர்களின் மரணங்கள் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை விடுவிக்கவேண்டும் எனவும் கோரி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 'புனர்வாழ்வு முகாம் நம் இளைஞர்களின் புதைகுழியா?', 'புனர்வாழ்வு வேண்டாம் அனைவரையும் விடுதலை செய்', 'சிறைச்சாலைப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்' உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், சரவணபவன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், புதிய ஜனநாயக சோசலிஷ லெனின் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல், நவசமஜவாதிக் கட்சியின் உறுப்பினர் ஜனகன், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, பிரதேசசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’