வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 ஆகஸ்ட், 2012

கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ.மு.காங்கிரஸுடன் த.தே.கூ. இணைந்து ஆட்சியமைக்கும்: சம்பந்தன்



கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம். எங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில், கிழக்கு மாகாணசபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்போம். தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சென்றதே தவிர, நாங்கள் இதில் இருந்து நழுவிச்செல்லவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனீவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ளமுடியம். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஏன் நடத்தப்படுகின்றது? எதற்காக நடத்தப்படுகின்றது? என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே தான் இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்' என்றார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட கிழக்கு மாகாணசபையும் ஏற்படுத்தப்பட்ட விதமும் அது இயங்கிய விதமும் எமக்கோ எமது மக்களுக்கோ திருப்தி அளிப்பதாக இருக்கமுடியாது. இருக்கவும் இல்லை. அந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தற்போது அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆளும் கட்சியில் போட்டியிடுகின்றவர்கள் தவிர, ஏனைய தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இங்கு பேசியிருக்கிறார்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அது எமது ஒற்றுமையைக் காட்டுகின்றது. அந்த ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியது, கட்டியெழுப்ப வேண்டியது உங்களினதும் எங்களினதும் கடமை. அதன் மூலமாக எமது மக்களுக்கு அதிகப்படியான பலத்தை நாம் சேர்ப்போம். எப்போதும் இல்லாதளவு தமிழர் பிரச்சினை இந்த நாட்டில் சர்வதேச மயமாக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் கருத்தென்ன. அமெரிக்கா கூறுகிறது, இந்தியா கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசி ஒரு தீர்வைக்காண வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தப் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வந்திருக்கிறது. அது தொடரக்கூடாது. இங்து வாழும் தமிழ் மக்கள் இழப்புகள், அழிவுகளை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் நியாயமான கோரிக்கை. அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டிருப்பதனாலேயே அவர்கள் அதனைக் கூறுகிறார்கள். அதற்கு ஒரு முடிவுவரவேண்டும் என்ற வகையில் நியாயமான வகையில் தீர்க்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையை ஒருமித்த நாட்டுக்குள் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்திருக்கிறது. தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது என்ற வகையில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். உலக நாடுகளின் சரித்திரத்தில் ஆளும் கட்சி ஒன்றைச் சொன்னால் அதனை எதிர்ப்பதே எதிர்க்கட்சி. இங்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி ஒரு தீர்வுக்கு வரவேண்டும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறார்கள். எனவே தமிழ் மக்கள் நிதானமாக நடந்தால் ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்கு உரிய போதிய வாய்ப்பு நடைபெறவுள்ள தேர்தலில் இருக்கிறது. அந்த வாய்ப்பை எவ்விதமாகப் பெறலாம் என்பது பற்றி சிந்திப்பது, அதுபற்றி பரிசீலிப்பது பொருத்தம் என்று நினைக்கிறேன். தற்போதுள்ள இந்த மாகாணசபை முறைமையை நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களின் விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு நியாயமான, நிரந்தரமான, கௌரவமான தீர்வாக நாங்கள் கருதமுடியாது. அதனை நாங்கள் நீண்டகாலமாக தெரிவித்துவந்திருக்கிறோம். அதேசமயம், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட கிழக்கு மாகாணசபையும் ஏற்படுத்தப்பட்ட விதமும் அது இயங்கிய விதமும் எமக்கோ எமது மக்களுக்கோ திருப்தி அளிப்பதாக இருக்க முடியாது. இருக்கவும் இல்லை. சுருக்கமாகச் கூறுவதாக இருந்தால் நாம் சுயாட்சி கேட்டோம். எமது மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டோம். மக்களது நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள உரித்து இருக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மக்களை ஏமாற்றி மத்திய அரசு தங்களுடைய தேவைகளுக்காக நலனுக்காக பயன்படுத்திக் கொண்டது. அதன் மூலமாக எமது மக்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் ஒரு மாற்றம் வரவேண்டும். அது வரவேண்டுமாக அந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது. அதனைத் தடுப்பதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறோம். அரசியல் தீர்வு சம்பந்தமாக தற்போதைய நிலை என்ன? அரசாங்கத்திற்கும் எங்களுக்கும் இடையில் இரண்டு பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன. எங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்திருப்பதுடன்; எழுத்திலும் வழங்கியுள்ளோம். அதற்குப் பொறுப்பான விதத்தில் அரசாங்கம் பதில் அளிக்கவில்லை.. மழுப்பி நேர்மை அற்ற முறையில் அவர்கள் தொடர்ந்து நடந்துவந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் நாங்கள் பேச்சிலிருந்து நிரந்தரமாக ஒதுங்கிவிடவில்லை. நாங்கள் அரசாங்கத்துடன் சில உடன்பாடுகளுக்கு வந்தோம். அந்த உடன்பாடுகளை நிறைவேற்றும்படி கேட்டோம். அதனை நிறைவேற்றால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து அதற்கு எங்களுடைய பெயர்களைக் கேட்கிறார்கள். நாங்கள் கொடுக்கவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படவேண்டும். அதன் மூலம் தீர்வுக்கு வரவேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒரு விளக்கம் இருக்கவேண்டும். அவ்வாறான விளக்கம் இல்லாத நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரமுடியாது என உறுதியாக கூறியிருக்கிறோம். அதில் அரசாங்கம் எம்மை அதற்குள் வரவழைப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்தார்கள். அது அவர்களுக்கு வெற்றி பெற முடியவில்லை. இப்போது சர்வதேச ரீதியாக சில முயற்சிகளை எடுக்கிறார்கள். எதையும் நாங்கள் உதாசீனம் செய்யமாட்டோம். எங்களுடைய மக்களுக்கு நலனுக்காக ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பது எங்களுடைய உறுதியான நிலைப்பாடு. அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் நாங்கள் ஏமாற்றப்படமுடியாது. ஒருபோதும் எமது மக்கள் ஏமாற்றப்படக்கூடாது. அதற்கு இடம்கொடுக்க முடியாது. எமது மக்களுக்கு நியாயமான, நிரந்தரமான நடைமுறைப்படுத்தக்கூடிய நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு தேவை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எமது மக்கள் கௌரவமாக, சுயமரியாதையுடன், பாதுகாப்பாக, தமது அரசியல், கலாசார, பாரம்பரிய அபிலாஷைகளை தங்களுக்குக் கிடைக்ககூடிய சுயாட்சி மூலமாக நிறைவேற்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாகப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது அரசாங்கத்திற்குத் தெரியும். தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதன் நிமித்தம்தான் பல்வேறு நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. அவற்றினை அரசாங்கம் சமாளிக்க வேண்டிய கடப்பாடும் அதற்கிருக்கிறது' என்றார். இந்தக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் ரி.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட கலந்துகொண்டனர். இதேவேளை, கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக களுவாஞ்சிக்குடிக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’