கிறிஸ்மஸ்தீவின் சிறுகுடாவின் கரைக்கு அண்மையில் பெரும்பான்மையாக ஆண்கள் அடங்கிய 39 பேரை ஏற்றிவந்த மிகவும் பழைய மீன்பிடிப்படகொன்று தற்போது நங்கூரமிட்டுள்ளது.
இப்படகில் 5 கடற்படையினரும் காணப்படுகின்றனர். இப்படகிலிருந்தவர்கள் இன்று காலை தமது படகில் நின்றவாறு கைகளை அசைத்துக்கொண்டு புன்னகையுடன் காணப்பட்டனர். இவர்கள் வந்த படகு முதல் நாள் இரவு வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ்தீவின் சிறு வளைகுடாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்களை கரைக்கு கொண்டுவந்து கிறிஸ்மஸ்தீவிலுள்ள புகலிடம் கோருவோரால் ஏற்கெனவே நிரம்பிவழிகின்ற முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வியாழக்கிழமை இரவிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வந்த 4 படகுகளில் இது கடைசியாக வந்த படகாகும். நேற்று 53 இலங்கையர்களுடன் வந்த இன்னுமொரு படகு பிளையிங் பிஷ் வளைகுடாவுக்கு கொண்டுவரப்பட்டது. இது மட்டுமன்றி நேற்று 67 இலங்கையர்கள் கிறிஸ்மஸ்தீவின் விமான நிலையத்தில் வந்திறங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை கொகோஸ்தீவைச் சென்றடைந்த இவர்கள் விமானம் மூலம் கிறிஸ்மஸ்தீவுக்கு அழைத்துவரப்பட்டனர். இதேவேளை, இனங்காணப்படாத 41 பேரை ஏற்றிவரும் இன்னுமொரு படகு வெள்ளிக்கிழமை ஆஷ்மோர்தீவுகளில் வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ்தீவுக்கு அழைத்துவரப்படுகின்றனர். கடந்த வாரம் புகலிடம் கோருவோரை ஏற்றிவந்த படகில் ஒரு இலங்கையர் பொக்களிப்பான் நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் இவ்வாறானவர்களை பிரித்துவைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை திணைக்களம் கூறியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’