வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜூலை, 2012

கிழக்கு மாகாண மக்கள் அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள சுயநலவாதிகளுக்கு வாக்களிக்கக்கூடாது


மௌ னமாக இருந்த சர்வதேசமும் எமது நலன் விரும்பிகளும், ஏன் இலங்கை அரசையும் கூட கடைசித் தேர்தலில் தமிழ்தேசியத்திற்கு நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் கண்திறக்க வைத்துள்ளீர்கள். இந்த நிலையில் தான் கிழக்கு மாகாணசபை முறைகேடாகக் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியத்தை நிலைநாட்ட கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி சிரேஷ்ட தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று புதன்கிழமை தேர்தல் தொடர்பாக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு உரையாற்றிய துரைரெத்தினம், தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் கடந்த காலத்தில் தமிழ் தேசியத்தைப் பலப்படுத்தவதற்காக முகம்தெரியாமலும் வற்புறுத்தலுக்குப் பணியாமலும் சொந்தபந்தம் பாராமலும் வாக்களித்தனர். கடந்த காலத்தில் ஒவ்வொரு குடும்பங்களும் ஒவ்வொரு விதத்தில் தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க உயிரூட்டியவர்கள்; இதனால் பலகுடும்பங்கள் இவ் இழப்பில் இருந்தும் இன்னமும் மீளவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மௌனமாக இருந்த சர்வதேசமும் எமது நலன் விரும்பிகளும், ஏன் இலங்கை அரசையும் கூட கடைசித் தேர்தலில் தமிழ்தேசியத்திற்கு நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் கண்திறக்க வைத்துள்ளீர்கள். இச்சந்தர்ப்பத்தில் தான் கிழக்கு மாகாணசபை முறைகேடாக கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தைப் பொறுத்தமட்டில் மூவினமக்களும் வாழ்கின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன ஐக்கியத்துடனேயே வாழ்வதற்காக பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தவர்கள். இந்த விட்டுக்கொடுப்பினால் தமிழ் மக்களைப் பாதித்த பல விடயங்களும் உள்ளன. கடந்த காலத்தில் தமிழ் மக்களைப் புறந்தள்ளி வட,கிழக்கில் ஆட்சியை நிலை நாட்ட முற்பட்ட அரசு நாட்டைப் பாதுகாக்கமுடியாமல் போனதே வரலாறாகும். எனவே எமது மக்ளுக்குக்கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்துத் தமிழ் மக்களும் தங்களது ஒற்றுமையையும், பலத்தையும் காண்பிக்கக் கூடிய தேர்தலாக இதனைப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச அரங்கில் தமிழ்மக்கள் மீதான பார்வையும் பதிவும் அதிகரித்திருக்கும் இவ் வேளையில் ஜெனிவா தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவை நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை விவகாரத்துக்காக அமெரிக்கா, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டும் இந்தியக் தூதுக்குழு இலங்கை வந்துசென்று, இராஜதந்திர நகர்வுகள் அதிகார பரவலாக்கல் தொடர்பாக வெளிச்சத்துக்குவரும் நிலையில் பாராளுமன்ற தெரிவிற்குழுவிற்கான அழைப்புடன், தீர்வு விடயம் தொடர்பான ஆரம்ப கருத்துக்கள் வலுவடைந்திருக்கின்றன. வட ,கிழக்கு விடயம் உட்பட ஏனைய அதிகாரப் பரவலாக்கலை செயல்படுத்தக் காலம் கனிகின்ற நிலையில் மத்திய அரசு இச்சாதகமான நிலைமையை இல்லாதொழிப்பதற்கு கிழக்கு மாகாணம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது எனக்காட்டி வடக்கில் மட்டும் பிரச்சினை உள்ளது என்பதையும் மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்தி கிழக்கில் பிரச்சினை இல்லை எனக்கூறுவதற்கும் பல தசாப்தங்களாக போராட்டம் நடத்தி வலியுடன் இருக்கும் தமிழ் மக்கள் எவரும் சோரம் போகமாட்டார்கள். இவ்வாறான நிலையில் அரசின் சூழ்ச்சிவலைக்குள் சிக்காமல் இருக்க தமிழ் மக்களாகியநாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்.விரும்பியோ விரும்பாமலோ இத்தேர்தல் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டால் தமிழ் சமூகம் எமது போராட்ட வலிமையையும் வலிமைமிக்க தியாத்தையும் பறைசாற்றுவதற்கு ஒரே முடிவு ஒற்றுமையாக வாக்களிப்பதேயாகும் மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையவேண்டுமானால் எமதுசமூகம் விழிப்படைந்தநிலையில் 100 சதவீதம் வாக்களிப்பதே தீர்வாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் சோரம் போபவர்கள் அல்லர் என்பதனையும் சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் பறைசாற்றியாகவேண்டுமானால் ஒருவாக்கைக்கூட தமிழ் மக்களின் உரிமையை இல்லாதொழிக்க அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள சுயநலவாதிகளுக்கு அளிக்காமல். எமது உரிமையைநிலைநாட்டும் தமிழ்தேசியத்திற்கே வாக்களிக்கவேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்தவேண்டுமாயின் எமது மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியத்திற்கு வாக்களித்தால் மட்டுமே சர்வதேசம் எமக்குசார்பாக பல செயற்திட்டங்களை முன்வைக்கும் .அந்தஅளவிற்கு இத்தேர்தலை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் பார்க்கவேண்டிய தேவையும் உள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமைகள் தொடர்பான பல விடயங்களும் நகர ஆரம்பித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், பொது அமைப்புக்கள், சங்கங்கள், குழுக்களும் தமிழ் தேசியத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் சுயமாகவே இறங்கிச் செயற்பட வேண்டிய கட்டாயமும் உருவாகியிருக்கிறது. பலஅமைப்புக்கள் இதை இப்போதே ஆரம்பித்தவிட்டன. எனவே கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 85ஆயிரம் வாக்காளர்கள் , மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2இலட்சத்து 55 ஆயிரம் வாக்காளர்கள், திருகோணமலை மாவட்டத்தில் 80ஆயிரம் வாக்காளர்கள் என மொத்தமாக 3இலட்சத்து 80 ஆயிரம் தமிழ் வாக்காளர் பதிவாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்தால் பெரும்பான்மைப் பலத்தைப்பெறமுடியும் . முஸ்லீம், சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக வாக்குகளை அதிகமாக அளிக்க இருப்பதால் அதைப் பெறப்போகும் கட்சிகளுடன் பொது உடன்படிக்கைசெய்து ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்பு எமக்கு உருவாகும்.எனவே தமிழ் மக்கள் அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குகளை தமிழ்தேசியத்திற்கு அளியுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’