இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பிராந்திய கற்கை நிலையம் இன்று (02) ஏ9 வீதியில் 155 கட்டைப்பகுதியில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பிராந்திய கற்கை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் இது போன்ற உயர் கல்வி நிலையங்கள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படுவது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்க விடயமுமாகும். இவ்வாறான கற்கை நிலையங்களை இம்மாவட்ட இளைஞர் யுவதிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் பெருமளவான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகின்ற அதேவேளை தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த வெற்றிடங்களுக்கு தகமையுள்ளவர்கள் இங்கு இல்லை. இந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் எமது செயற்பாடுகளுக்கு இது ஒரு தடையாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்நிலையம் சிறந்து விளங்க வேண்டும். மேலும் மீள்குடியேற்றத்திற்கு பிறகு ஏராளமான வசதிவாய்ப்புக்கள் இம்மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. யாழ் பல்கலைகழகத்தின் பொறியியல் விவசாய பீடங்கள் தொழிநுட்ப கல்லூரிகள் உயர்கல்வி நிலையங்கள் என ஆரம்பிக்கப்பட்டு கொண்டிருகின்றன. இது இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அத்தோடு இவ்வாறான உயர்கற்கை நிலையங்களில் கல்வியை மேற்கொள்வதன் மூலம் பெறக்கூடிய பயன்கள் மற்றும் வேலைவாய்ப்பு தன்மைகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகள் மட்டத்திலிருந்து தெளிவுபடுத்தல்களை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்த செயற்பாடுகள் பூரண பயனை அடையும். இது போன்ற கற்கை நிலையங்கள் தொடர்பில் மக்களுக்கு போதிய தெளிவு இன்மை நிலவுகிறது அதனை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் என்ரிப் திட்டத்தின் கீழ் ஜம்பது இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைகழத்தின் உபவேந்தர் உபாலி விதானபத்திரண மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் பதிவாளர் விந்தியா ஜயசேன அதன் பணிப்பாளர் நிசாந்த ஓய்வு பெற்ற அரச அதிபர் துரைராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் விரிவுரையாளர்கள் பணியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’