குரூர பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டை மீண்டும் எந்தச் சக்தியும் பிரித்தெடுத்துக் கொள்ளுவதற்கு இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்து இலங்கையை உலகில் சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனுக்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்திற்கு ஒத்துழைப்பும், நல் வாழ்த்தும் தெரிவிப்பதற்காக பெருந்தொகையான இலங்கையர் லண்டன், பார்க் லேனில் மறியல் போராட்டமொன்றை நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் வைர விழாவில் அவரது அழைப்பின் பேரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் கடந்த லண்டன் விஜயத்தை விட தற்போதைய லண்டன் விஜயம் தோல்வி அடைந்துள்ளது என வெளி உலகிற்குக் காட்டும் முயற்சியில் லண்டனிலுள்ள புலி உறுப்பினர்களில் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் ஜனாதிபதி தங்கி இருந்த ஹோட்டலுக்கு முன்பாக பிரசாரங்களுடன் கூடிய சுலோக அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இதற்கு பதிலளிக்கும் வகையில் லண்டனில் வாழும் இலங்கையர் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு எதிராக எதிர்த் திசையில் நின்றவாறு ஜனாதிபதிக்கு ஆதரவாக அவரது பயணம் வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்குடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் ஹோட்டலிலிருந்து வெளியே செல்ல வேண்டாமென பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கி இருந்தனர். ஆயினும் ஜனாதிபதி அந்த ஆலோசனையையும், தற்போது லண்டனில் நிலவும் கடும் குளிர் காலநிலையையும் பொருட்படுத்தாமல் இலங்கையர் கூடி இருந்த பகுதிக்குவந்ததுடன் நாட்டுக்காக அணி திரண்டிருந்த தாய் நாட்டை நேசிக்கும் சகலருக்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். இச்சமயம் ஜனாதிபதி அவர்கள், ‘தாய் நாட்டுக்காக நடாத்தப்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டம் தமக்கு பெரும் சக்தியாக உள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கைக்காக குரல் கொடுப்பவர்களுக்கா கவும், சகல இனத்தவர்களுக்காகவும் கட்டியெழுப்பப்படுகின்ற நாட்டை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கு எந்த அர்ப்பணிப்பையும் செய்வேன் என்று குறிப்பிட்டார். இரண்டு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் அச்சமின்றி ஜனாதிபதி அவர்கள் வருகை தந்தது குறித்து ஆச்சரியமடைந்த இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள், இது தமது நாட்டுக்காக முன்னெடுக்கப்படுகின்ற உண்மையான குரலுக்குரிய பாரிய சக்தி என்று கூறினர். இச்சந்தர்ப்பத்தில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளான புலி ஆதரவாளர்கள் பின்வாங்கிச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மாவை ஜனாதிபதி அவர்கள் நேற்று முன்தினம் மாலை சந்தித்தார். இச்சமயம் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு எடுத்துக் கூறினார். ‘பொதுநல வாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவதாக கமலேஷ் ஷர்மா இச்சந்தர்ப்பத்தில் கூறினார். இது இவ்வாறிருக்க ஜனாதிபதி அவர்களுக்கும், பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் குழுவுக்குமிடையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. மூன்று மணித்தியாலயங்களுக்கும் மேல் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இலங்கையின் உண்மை தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் பிரபுக்களுக்கு எடுத்துக் கூறினார். இச்சமயம் கருத்து தெரிவித்த பிரபுக்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதேநேரம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களையிட்டும் பிரபுக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பையும் அதற்குப் பெற்றுத் தருவதாகவும் கூறினர். இப்பேச்சுவார்த்தையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் கிரிஸ் நோனிஷ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண் டார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’