கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்ட நான் இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்த வேளை தனிமாவட்டக் கோரிக்கையை முன்வைத்து யாழ்.மாவட்டத்துடன் இருந்த கிளிநொச்சியை தனி மாவட்டமாக பிரித்தேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி தொகுதி எம்.பி.யுமான வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தந்தை செல்வா நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த சமகால சமூக, பொருளாதார புனர்வாழ்வு, கல்வி அபிவிருத்திக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையற்றுகையில் முன்னாள் எம்.பி. வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தந்தை செல்வா நற்பணி மன்றத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தமர்வில் பெருமளவு இளைஞர,; யுவதிகளும் சமூக ஆர்வலர்களும் பங்குகொண்டனர். தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் மேலும் பேசுகையில், தனி மாவட்டம் உருவாகுவதன் மூலம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் மருத்துவபீடம் சென்று முதல் தடவையாக மருத்துவர்களானார்கள். அதேபோல் பொறியியலாளர்களாகவும் வர்த்தகம், சட்டம், கலைத்துறை சார்ந்தவர்களாகவும் விளங்கி வருகின்றனர். இவ்வாறான கிளிநொச்சி மாவட்டம் அண்மையில் வெளியான க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் இறுதி இடத்தைப் பெற்றுள்ளது கவலை தருகிறது. இப்பரீட்சை முடிவின் பிரகாரம் கிளிநொச்சிப் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவர்கள் ஒரு பாடத்தில் தானும் சித்தியடையாது சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த நிலையில் மாற்றம் வர அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு கல்வியில் எமது மாவட்டம் அபிவிருத்தி காண வேண்டும். இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறி வீட்டு வசதிகள், மலசலகூடப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்வித் தேவைகள் நிறைவேறாமை போன்ற காரணங்களாலும் மாற்றுவலுவுள்ளவர்களாலும் பாதிப்புகள் அதிகரித்துச் செல்கின்றன. புனர்வாழ்வு நடவடிக்கைகள் சரிவர செயற்படுவதைக் காண முடியவில்லை. அண்மையில் பிரான்ஸ் தூதுவர் கிளிநொச்சிக்கு வந்த போது பாதிக்கப்பட்ட மக்களது நல்வாழ்விற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அவரும் சில உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளார். கடந்த வன்னி யுத்த காலத்தில் நான் இரு தரப்பினரையும் யுத்தத்தை நிறுத்துமாறு தான் கோரினேன். இவ்வாறு யுத்தம் நிறுத்தப்பட்டிருந்தால் பெருமளவானோர் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்றும் குறிபிட்டார். இந்நிகழ்வில் தந்தை செல்வா நற்பணி மன்ற செயலாளர் ச.ராஜன், அன்னலட்சுமி ஆகியோர் உரையாற்றினர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’