இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நேபாள அரசின் சிரேஸ்ட உத்தியோகத்தர் குழு இலங்கையின் அபிவிருத்தி முகாமைத்துவ கண்காணிப்பு முறைகள் மற்றும் பெறுபேறுகளை மதிப்பிடும் முறைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இன்றைய தினம் இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜெய்க்கா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு வருகை தந்துள்ள இக்குழுவினர் இங்குள்ள அபிவிருத்தி முகாமைத்துவ கண்காணிப்பு முறைகள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து அறிந்துகொண்டதுடன் அவற்றை நேபாள நாட்டிலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர். குறிப்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான நிறுவனங்களினது செயற்பாடுகள் தொடர்பிலும் அவற்றினது கண்காணிப்பு மதிப்பீடு மற்றும் முகாமைத்துவ முறைமைகள் தொடர்பிலும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி விளக்கவுரையாற்றியதுடன் இது தொடர்பிலான அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். பதினொரு பேரைக்கொண்ட நேபாள அரசின் பிரதிநிதிகளும் ஜெய்க்கா நிறுவனத்தைச் சேர்ந்த இருவரும் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். கலந்துரையாடலின் நிறைவில் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்ட நேபாள அரச பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதியமைச்சர் வீரக்குமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோருக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கினர். இதன்போது யுஎன்டிபி நிறுவனப் பிரதிநிதி உள்ளிட்ட அமைச்சின் துறைசார்ந்த நிறுவனங்களினது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’