வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மே, 2012

பொன்சேகா சனிக்கிழமை விடுதலையாவார்?



யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நாளை மறுதினம் சனிக்கிழமை விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் தடுத்து வைத்திருப்பதால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எமது அரசாங்கம் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றது. ஆகையினால், பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கிக் கூறியுள்ளனர். இதனையடுத்து யுத்த வெற்றியின் மூன்று ஆண்டு நிறைவில் பொன்சேகா விடுதலை ஆகும் செய்தியை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்;பார்க்கின்றோம்' என அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.
இதேவேளை, பொன்சேகாவின் விடுதலைக்காக பாடுபட்ட ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸும், பொன்சேகா வெகு விரைவில் விடுதலையாவார் என்று தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் டிரான் அலஸ் மேலும் தெரிவிக்கையில், 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றுக் காலை ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக முக்கியத்துவமானதும் வெற்றிகரமானதுமான பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டேன். இச்சந்திப்பின் மூலம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொன்சேகாவை வெகு விரைவில் விடுதலை செய்வேன் என்று எனக்கு உறுதியளித்தார். பொன்செகாவை விடுதலை செய்யும் விடயத்தில் தீர்க்கப்பட வேண்டிய சிறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் ஓரிரு நாட்களில் அவற்றை நிவர்த்தி செய்து பொன்சேகாவின் விடுதலையை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார்' என்றும் டிரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’