வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஏப்ரல், 2012

கிழக்கிலங்கையில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்



லங்கையில் மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குமார் உட்பட சிலரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குறித்த பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் முழு நாள் கடையடைப்பு (ஹர்த்தால்) அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அரச, தனியார் காரியாலயங்கள் ஊழியர்கள் வரவின்மையாலும், பாடசாலைகள் மாணவர் வரவின்மையாலும் இயங்கவில்லை. சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு உள்ளுர் போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்பிரதேசங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுளளது.காலையில் வீதிகளின் குறக்கே மரக் குற்றிகளைப் போட்டும், டயர்களை எரித்தும் போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் பொலிசாரும், பாதுகாப்புத் தரப்பினரும் விரைந்து அதனை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
வீதிகளிலும் பொது இடங்களிலும் கூட்டமாகக் காணப்பட்டவர்களை பாதுகாப்பு தரப்பினர் விரட்ட முற்பட்ட போது சில இடங்களில் இரு சாராருக்குமிடையில் முறுகல் நிலை காணப்பட்டதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய ஹர்த்தாலுக்கான அழைப்பு அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர் சம்மேளனம் எனக் குறிப்பிட்டு துண்டு பிரசுரம் மூலம் விடுக்கப்பட்டதாகவும், இந்த அறிவித்தல் பள்ளிவாசல் ஒலி பெருக்கிகளிலும் அறிவிக்கப்பட்டதாகவும் உள்ளுர் மக்களின் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
நேற்று இரவு முதல் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் வழமை நாட்களை விட மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கிழக்கு பிராந்திய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா அந்த பகுதிக்கு விஜயம் செய்து நேற்று மாலை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்திப்பொன்றையும் மேற்கொண்டு தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளித்திருந்தார்.
காத்தான்குடியிலும் ஹர்த்தால்
எரிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன அலுவலகம்
எரிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன அலுவலகம்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்திலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அந்த பிரதேசத்திலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அலுவலகம் முன்பக்க பிரதான வாசலில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மரப் பலகைளை குவித்து தீ வைத்த போதிலும் அவ்வழியாகச் சென்ற பாதுகாப்பு தரப்பினரால் தீ அணைக்கப்பட்டதாக சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம் சுபைர் கூறுகின்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தங்களால் அடையாளம் காணப்படவில்லை எனக் கூறும் அவர், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் அகில இலங்கை உலமா சபையின் தீர்மானத்திற்கு ஏற்ப செயற்பட தாம் முடிவெடுத்ததன் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தாம் கருதுவதாகவும் கூறுகின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’