வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஹெல உறுமய இனவாத பிரிவினைவாத கட்சி:மனோ _



ந்நாட்டில் இன்று இனவாதத்தையும், பிரிவினைவாததையும் முன்னெடுக்கும் கட்சி ஜாதிக ஹெல உறுமய ஆகும். தம்புள்ளை பள்ளி உடைப்பு தொடக்கம் நாட்டில் இன்று முன்னெடுக்கப்படும் அனைத்து இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ மதஸ்தலங்கள் உடைப்பு சம்பவங்களையும் இவர்கள் நியாயப்படுத்துகிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு நகரமண்டப பகுதியில் அமைந்துள்ள தெவதகஹா பள்ளிவாசலுக்கு எதிரில், வெள்ளிக்கிழமை நண்பகல் பிரார்த்தனைகளுக்கு பின்னர் முஸ்லிம், தமிழ், சிங்கள அரசியல் தலைவர்கள், பெருந்தொகையான பொதுமக்கள் இணைந்து நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த மதவாத சிந்தனைக்கு பின்னாலே இவர்கள்தான் இருக்கிறார்கள். கோயில்களையும், பள்ளிகளையும், தேவாலயங்களையும் உடைப்பதன்மூலம், இவர்கள் இன்று நாட்டை உடைக்கிறார்கள். ஹெல உறுமயவவின் முன்னோர்களின் நடவடிக்கையையே தமிழர்கள் மத்தியில் பிரிவினை சிந்தனை ஏற்பட காரணமாக அமைந்தது. இன்று முஸ்லிம் மக்கள் மத்தியிலும், பிரிவினை சிந்தனை ஏற்பட இவர்களே காரணமாக அமைகிறார்கள். அதனால்தான் இந்நாட்டில் பிரிவினையை தூண்டும் இனவாத கட்சி என, ஜாதிக ஹெல உறுமயவை நான் நேரடியாக குற்றம் சாட்டுகிறேன். இஸ்லாமிய சகோதாரர்களின் மத நிறுவனங்களின்மீது சமகாலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவல்ல. பலாங்கொடையில் மலையேறி சென்று தாக்கினார்கள். அனுராதபுரத்தில் தாக்கி அழித்தார்கள். இன்று தம்புள்ளையில் காடைத்தனம் அரங்கேறியுள்ளது. அங்கு ஒரு விஷ்ணு மற்றும் காளி கோயிலையும் பயமுறுத்தி உள்ளார்கள். தம்புள்ளையில் பள்ளியை தாக்கி சேதப்படுத்திவிட்டு, சேதமில்லை என்ற அறிவிப்பு வேறு வெளியிடப்பட்டுள்ளது. இது மரமேறி விழுந்தவனை மாடுமுட்டிய கதை ஆகும். தற்போது இரண்டு புதுக்கதைகள் விடுகிறார்கள். அதாவது, ஜனாதிபதி நாடு திரும்பியதும், நல்ல முடிவு காண்போம் என்று சொல்கிறார்கள். எங்களுக்கு தெரிந்தவரையில் அவர் முடிவை எடுத்து சொல்லிவிட்டுதான் வெளிநாடு போனார். அடுத்தது, புதிய இடத்தில் விஸ்தாரமான புதுபள்ளியை கட்டி தருகிறோம் என்று சொல்கிறார்கள். இது எப்படி என்றால், நாளை நமது வீடுகளுக்குள் நுழைந்து, உங்கள் அம்மாவுக்கு வயதாகிவிட்டது. அவர்களை அனுப்பிவிட்டு புதிதாய் ஒரு தாயை தருகிறோம், வீட்டில் வைத்துகொள்ளுங்கள் என்று சொல்லுவதை போன்றது ஆகும். பள்ளியை உடைத்தால் உடையுங்கள். ஆனால் வேறு ஒரு இடத்தில் பள்ளியை கட்டி தருகிறோம் என்று சொல்லாதீர்கள். நினைத்த, நினைத்த இடங்களில் எல்லாம் மாற்றி, மாற்றி கட்டுவதற்கு இது மனிதர்கள் வாழும் வீடு அல்ல. நீங்கள் உடையுங்கள். ஆனால் உடைப்பீர்களானால், அந்த உடைப்பு வரலாற்றில் இடம் பெறும் என்பதை மறவாதீர்கள் . ஒரு நாள் வரலாற்றுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதையும் மறவாதீர்கள். உடைப்பவர்கள் மட்டும் அல்ல, உடைப்பவர்களுக்கு துணை இருப்பவர்களும், வரலாற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். இந்த நிலைபாட்டில் முஸ்லிம் மக்களும், தலைவர்களும் உறுதியுடன் இருக்க வேண்டும். நியாயசிந்தை கொண்ட தமிழ், சிங்கள மக்கள் உங்களுக்கு இருப்பார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’