வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

லைபீரிய முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றவாளி: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு



லை
பீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர், போர்க் குற்றவாளி என 'சியாரா லியோனுக்கான விசேட நீதிமன்றம் ' எனும் ஐ.நா. ஆதரவுடனான சர்வதேச நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், லைபீரியாவில் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட தேசிய தேசாபிமான முன்னணி எனும் குழுவுக்கு தலைமை தாங்கியவர். அந்நாட்டில் குறைந்தபட்சம் 7 ஆயுத குழுக்கள் சம்பந்தப்பட்ட மோதல்களினால் 250,000 பேர் பலியாகினர். 1997 ஆம் ஆண்டு லைபீரிய ஜனாதிபதியாக சார்ள்ஸ் டெய்லர் தெரிவுசெய்யப்பட்டார்.
அதேவேளை, 1991 முதல் 2001 ஆம் ஆண்டுவரை சியரா லியோனில் இடம்பெற்ற சிவில் யுத்தததின்போது சியரா லியோன் கிளர்ச்சியாளர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு ஆயுதம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். அந்த உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 120,000 பேர் கொல்லப்பட்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் அங்கவீனமானதுடன் போதையேறிய கிளர்ச்சியாளர்களால் பலர் கொல்லப்பட்டதாகவும் திட்டமிடப்பட்ட பாலியல் வல்லுறவுகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் முதலான குற்றச்செயல்கள் இடம்பெற்றன. இவ்வாறு பயங்கர வன்முறைகளில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களிடமிருந்து இரத்தினக்கற்களை பெற்றுக்கொண்டு அவற்றுக்குப் பதிலாக ஆயுதங்களை வழங்கியதாக சார்ள்ஸ் டெய்லர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2003 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய சார்ள்ஸ் டெய்லர், நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றார். 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டு லைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். அங்கு ஐ.நா. விசேட நீதிமன்றமொன்றின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், அவ்வருடம் ஜுன்மாதம் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்காக நெதர்லாந்துக்கு இடமாற்றப்பட்டார். 2007 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஹேக் நகரில், சியாரா லியோனுக்கான விசேட நீதிமன்றத்தினால் டெய்லருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு வழக்கு விசாரணை ஆரம்பமாகியது. இவ்வழக்கில் நேற்று வியாழக்கிழமை அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தகால போர்க்குற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், நாடொன்றின் தலைவராக பதவி வகித்த ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தினால் போர்க்குற்றவாளியாக காணப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். சார்ள்ஸ் டெய்லருக்கான தண்டனை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’