வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 மார்ச், 2012

ஜெனீவா தீர்மானத்தால் இலங்கையில் இனக்கலவரம் என்ற சம்பிக்கவின் கருத்து பாரதூரமானது: மனோ கணேசன்


த்தேச ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றதை போல ஒரு இனக்கலவரம் வரலாம் என்று, தமிழ் மக்களை பயமுறுத்தும் தொனியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்து இருப்பது பாரதூரமானது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ளதாக சொல்லப்படும் தீர்மானம், இலங்கையில் நடைபெற்ற போரை பிரதான அடிப்படையாக கொண்டது. இந்த போரை நடத்துவதற்கு அன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பன இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தன. இதே நாடுகள்தான் இன்று ஜெனீவாவில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரவும் கூடி நிற்கிறார்கள். சர்வதேச நண்பர்களுடன் இணைந்து நடத்திய போரிலும் அன்று பாதிப்புக்கு உள்ளானது தமிழர்கள்தான். போர் முடிந்து தமது அதே சர்வதேச நண்பர்களுடன் சண்டை போட்டுகொண்டு ஐநாவில் தீர்மானம் இன்று நிறைவேறினாலும் பாதிப்புக்கு உள்ளாவது தமிழர்கள்தான். இந்த ஹெல உறுமய கோட்பாட்டை நாம் ஒரு போதும் ஏற்க முடியாது எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அவனவன் கூடிகுலாவினாலும் சரி, பிறகு சண்டை போட்டுக்கொண்டாலும் சரி, பாதிப்பு என்னவோ தமிழர்களுக்கு என்பது எந்த ஊர் நியாயம் என்று புரியவில்லை. அமைச்சர் சம்பிக்கவின் கருத்து தொடர்பில் அரசாங்க தலைமைபீடம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழ் மக்களின் பாதுகாப்பில் அரசாங்கம் அக்கறையின்று செயல்பட்டதாகத்தான் குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே இந்த விடயத்தில் மேலும் நெருப்பை ஊற்றும் விதத்தில் பொறுப்பற்று பேசுகின்ற தமது அமைச்சரை அரசாங்கம் நெறிப்படுத்த வேண்டும். அதேபோல் போர் சமயத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஐநா சபை தவறிவிட்டது என அன்று ஐ.நா.வில் பணியாற்றிய பணியாளர்களே இன்று குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்க, இந்திய, ஐரோப்பிய அரசாங்கங்கள் முன்னின்று நடத்திய போர் தொடர்பில்தான் இன்று பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. இதை இன்று தமிழர்களை காப்பாற்றுவதற்கு கிளம்பியுள்ளதாக கூறப்படுகின்ற சர்வதேச சமூகம் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். கொழும்பில் வாழும் தமிழ் மக்களின் தலைமை கட்சி என்ற முறையில் நாம் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கின்றோம். இலங்கையுள்ள சர்வதேச சமூக பிரதிநிதிகளின் கவனத்திற்கு இது தொடர்பான எமது உணர்வுகளை தெரிவித்துள்ளோம். அமைச்சர் சம்பிக்கவின் பொறுப்பற்ற கருத்து தொடர்பில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திடம் தமது அதிருப்தியை தெரிவிக்க வேண்டும். இன்னொரு கலவரம் என்ற பேச்சுக்கே இங்கு இடம் இருக்க முடியாது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் விட்டுகொடுக்க முடியாது' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’