இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 100 ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்தார். இன்று நடைபெறும் ஆசிய கிண்ணத்தொடரில் பங்களாதேஷுடனான போட்டியின்போது சற்றுமுன் 100 ஓட்டங்களைக் கடந்தார் டெண்டுல்கர்.
இது சர்வதேச போட்டிகளின் அவரின் 100 ஆவது சதம் ஆகும் . டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 100 சதங்களை குவித்த உலகின் முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவர் ஏற்கெனவே, 188 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் 461 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 48 சதங்களையும் பெற்றிருந்தார். இறுதியாக கடந்த உலகக்கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுடனான போட்டியின்போது டெண்டுல்கர் சதம் குவித்தார். அது அவரின் 99 ஆவது சதம் ஆகும். அதன்பின் கடந்த ஒரு வருடகாலத்தில் அவர் பல்வேறு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிபோதிலும் தனது 100 ஆவது சதத்தை பெறத் தவறினார். இந்நிலையில் இன்று தனது ரசிகர்களின் நீண்டநாள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றினார். அதிக சதங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொன்டிங் உள்ளார். அவர் 41 டெஸ்ட் சதங்கள் 30 ஒருநாள் போட்டி சதங்கள் உட்பட 71 சதங்களைக் குவித்துள்ளார். இதுவரை டெஸ்ற் போட்டிகளில் 51 சதங்களையும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 49 சதங்களையும் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ற் போட்டிகளில் 65 அரைச்சதங்களையும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 96 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் அவுஸ்ரேலியாவுக்கெதிராக 20 சதங்களையும், இலங்கைக்கெதிராக 17 சதங்களையும், தென்னாபிரிக்காவுக்கெதிராக 12 சதங்களையும், இங்கிலாந்திற்கெதிராக 9 சதங்களையும், நியூசிலாந்துக்கெதிராக 9 சதங்களையும், சிம்பாப்வேயிற்று எதிராக 8 சதங்களையும், பாகிஸ்தானுக்கெதிராக 7 சதங்களையும், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 7 சதங்களையும், பங்களாதேஷிற்கு எதிராக 6 சதங்களையும், கென்யாவிற்கு எதிராக 4 சதங்களையும், நமிபீயாவிற்கு எதிராக ஒரு சதத்தையும் பெற்றுள்ளார். இதுவரை சர்வதேசப் போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்றவர்களில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் காணப்படும் றிக்கி பொன்டிங் 71 சதங்களோடும், ஜக்ஸ் கலிஸ் 59 சதங்களோடும், பிரைன் லாரா 53 சதங்களோடும் காணப்படுகின்றனர். இன்று பங்களாதேஷிற்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் பெற்றுக் கொண்ட சதம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்களாதேஷிற்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் பெற்றுக்கொண்ட முதலாவது சதமாகவும் அமைந்தது. எனினும் இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சிறிது மெதுவாகத் துடுப்பெடுத்தாடியிருந்தார். 147 பந்துகளில் 114 ஓட்டங்களையே அவர் பெற்றிருந்தார். தென்னாபிரிக்காவுக்கெதிராக அவர் பெற்றுக்கொண்ட ஆட்டமிழக்காத 200 ஓட்டங்களைப் பெற அவர் பெற்றுக்கொண்டதும் அதே 147 பந்துகள் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’