வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 மார்ச், 2012

கித்துள்சார் உற்பத்திகளை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

கித்துள்சார் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு தேசிய மட்டத்திலான செயலகமொன்றை அமைத்து அதனூடாக விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (27) அமைச்சர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்காலத்தில் கித்துள் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கும் அதுசார்ந்தோரை ஊக்குவித்து அதனூடாக குறித்த தொழிற்துறையை விருத்தி செய்வதற்கும் தேசிய மட்டத்திலான செயலகமொன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பனை தென்னை போன்ற வளங்களை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு செயற்திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் எமது அமைச்சின் கீழ் அமைக்கப்படவுள்ள தேசிய செயலகத்திற்கூடாக கித்துள்சார் உற்பத்திகளும் பனை வளத்திற்கீடாக மேம்படுத்தப்படும் அதேவேளை இதனூடாக துறைசார்ந்தோர் அதிக பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சுயபொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைய முடியுமென்றும் சுட்டிக்காட்டினார். 1974ம் ஆண்டு பனை அபிவிருத்திச் சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் பயன்பாடுகள் பரவலாக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அதனை நவீன தொழில்நுட்பத்துடன் விருத்தி செய்யும் நோக்கில் யுத்தம் காரணமாக சேதமடைந்த கைதடியில் அமையப் பெற்றுள்ள பனைவள ஆராய்ச்சி நிலையத்தை இந்திய தொழில்நுட்பவியலாளர்களுடன் இணைந்து உள்ளூர் தொழில்நுட்பவியலாளர்களும் புதுப்பொலிவுடன் புனரமைத்து வருகின்றனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கித்துளக வருண 2012 கண்காட்சி மற்றும் விற்பனையின் போது 50க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் கித்துள்சார் உற்பத்தியாளர்களின் தனிநபர் வருமானம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரையில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையின் போது உள்ளூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கித்துளக வருண 2012 தொடர்பான விளக்கங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்கா மற்றும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் நிகழ்த்தினர். கித்துளக வருண 2012 கண்காட்சியும் விற்பனையும் அடுத்த மாதம் 05 ம் திகதி முதல் 07ம் திகதி வரை வரை பௌத்தலோக மாவத்தை கொழும்பு 07 அமைந்துள்ள சுதர்சி வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன் இதன்போது கித்துள் மற்றும் பனைசார்ந்த உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் உள்ளிட்ட அமைச்சின் துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் உடனிருந்தனர்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’