வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 மார்ச், 2012

ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தன் அவசர கடிதம்


.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 47 உறுப்பு நாடுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். பெப்ரவரி 27 என திகதியிடப்பட்ட இக்கடிதம் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என தெரிவித்ததன் பின்னர் இக்கடிதத்தினை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரா.சம்பந்தனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் சாரம் வருமாறு... • மே 2009இல் இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழியை தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகம் யுத்தத்தின் இறுதிக்கட்டம் பற்றி தனக்கு அறிக்கையளிக்கவென ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. உண்மையைக் கூறுவதும் குற்றமிழைத்தவர்களை இனங்காணலும் கடந்தகால துயரங்கள் மீண்டும் ஏற்படாவண்ணம் இருப்பதற்கான சிறந்த வழி என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். • இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் குறைபாடுகளை நாம் சர்வதேச சமுதாயத்திற்கு எடுத்துக் கூறினோம். இருப்பினும் கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளின் நல்ல அம்சங்கள் சிலவற்றையும் இனம் காண்போம். அவை வடக்கு, கிழக்கு பகுதியிலிருந்து இராணுத்தை விரைந்து அகற்றுவது, துணைப் படைகளின் மனித உரிமை மீறல்களை விசாரித்தல், அதிகாரத்தை பகிர்வதற்கான நாடாளுமன்ற சட்டங்களை இயற்றுதல் என்பனவே அவை. ஆயினும் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. • கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தடுத்துவைக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு கூறியது. அது துணைப்படைகளின் ஆயுதங்களைக் களையவேண்டுமெனக் கூறியது. ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் எதுவும் செய்யவில்லை. • மனித உரிமைகள், மனித பாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமாகவே உள்ளன. வாழ்வின் சகல அம்பங்களிலும் இராணுவம் தலையிடுகின்றது. சிவில் நிர்வாகம் தொழிற்படுவதற்கு இராணுவம் தடையாக உள்ளது. அரச, தனியார் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி பயன்படுத்துகின்றது. மக்கள் மீள்குடியேறவேண்டிய இடங்களில் இராணுவக் குடியிருப்புகளை அமைத்துவருகின்றது. • இராணுவ மயப்படுத்தலினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள், குழந்தைகள் உள்ளனர். முன்னார் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் அங்கத்தவர்கள், சுகம் வழங்கும் பெண்களாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பலாத்காரம் செய்தல், மனிதக் கடத்தல், விபசாரம் ஆகிய சம்பவங்களில் துணைப்படையினர் இராணுவத்துடன் சேர்ந்து செயற்படுகின்றனர். • ஜனநாயக ரீதியாக இலங்கை தமிழ் மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை அரசாங்கம் புறக்கணித்தே வந்துள்ளன. வடக்கு, கிழக்கின் இன கட்டமைப்பை திட்டமிட்டு மாற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளது. அரசாங்கசேவையில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிப்படுகின்றனர். போரின்போது பல இந்து கோவில்கள் அழிக்கப்பட்டன. பௌத்த விகாரைகள் அமைப்பதில் அரசாங்கம் மும்முரமாக உள்ளது. • மேற்படி பாதகங்களை நீக்கும் வகையில் வடக்கு, கிழக்குக்கு அரச அதிகாரம் வழங்கப்படுவது அவசியம். அரசாங்கம் ஜனவரி 2012இல் இருபக்க பேச்சுவார்த்தையிலிருந்து ஒருதலைப்பட்டசமாக விலகியுள்ளது. பிரிக்கப்படாத, ஐக்கிய இலங்கையினுள் நியாயமான நடைமுறைச் சாத்தியமான நிலைத்திருக்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை உருவாக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியோடு உள்ளோம். • யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்கள் தொடர்பில் உண்மையறியப்பட வேண்டும். நீதியும் பரிகாரமும் காணப்பட வேண்டும் என நாம் நம்புகின்றோம். • ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வில் இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை நடைமுறைப்படுத்த இதுவரை ஏதும் செய்யவில்லை எனவும் அது பொறுப்புக் கூறும் விடயத்தை கருத்திலெடுத்து செயற்பட வேண்டும் எனவும் கூறும் ஒரு தீர்மானம் வரவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த தீர்;மானம் கொடுக்கவல்லது. இதன் மூலம் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள் மெய்படுமென நம்புகின்றோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’