வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 பிப்ரவரி, 2012

ஒரு போதும் தர விரும்பாததைப் பற்றி பேசி காலத்தை ஓட்டுகிறது அரசாங்கம் - மனோ குற்றச்சாட்டு


13 ஆம் திருத்தத்தின் கீழ் இருப்பதைக்கூட தராமல் கடும் போக்கில் இருக்கின்ற இந்த அரசாங்கம், தான் ஒரு போதும் தர விரும்பாத 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து காலத்தை ஓட்டுகிறது. கிருஷ்ணாவுடன் தான் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்பதற்கு உடன் படவில்லை என்று ஜனாதிபதி இன்று சொல்கிறார். அப்படியானால் இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் முன் சொல்லிச் சென்றது பொய்யா? இன்று மீண்டும் சர்வ கட்சிக் கதையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார். அப்படியானால் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டுமா? இந்தப் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும்? வண. மதுலுவாவே சோபித்த தேரர் தலைமையில் கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற சமூக நீதிக்கான தேசிய இயக்கக் கூட்டத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் மேற்கண்ட கேள்விகளை எழுப்பினார்.
ஐ.தே.க எம்பி கரு ஜயசூரிய, பல்கலைகழகப் பேராசிரியர் சங்காப் பேச்சாளர் கலாநிதி மாயின் மென்டிஸ் ஆகியோர் உட்பட பெருந்தொகையான சிங்கள புத்தி ஜீவிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, என்னைப் பேச அழைத்தவர் தேசிய ஒற்றுமை பற்றி மனோ கணேசன் பேசுவார் என சொன்னார். இந்த அறிமுகம் எனக்குக் கூறப்பட்ட ஆலோசனையா அல்லது நிபந்தனையா எனத் தெரியவில்லை. நான் பிரிபடாத இலங்கை என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். ஆனால் பிரிபடாத இலங்கையில் அதிகாரம் பிரிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதி கொண்டவன். இதை இந்த சபை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் ஏனைய எட்டு மாகாணங்களில் இயங்கும் அரைகுறை மாகாண சபைகூட வட மாகாணத்தில் இல்லை. இதற்குக் காரணம் இந்த அரசாங்கம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்தினால் கூட்டமைப்பு அங்கு ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என அரசாங்கத்திற்கு பயம். தனது ஆளும் கூட்டணிக்கு வெளியே எந்த ஒரு கட்சியும், நாட்டில் அதிகாரத்திற்கு வரக் கூடாது என்பதுதான் இவர்களது ஜனநாயகம். ஜனாதிபதியும் தாங்களே. மத்திய அரசாங்கமும் தாங்களே. இவை போதாது. நாட்டில் உள்ள ஒன்பது மாகாண சபைகளும், அனைத்து மாநகர, நகர, பிரதேச சபைகளும் தங்கள் கட்டுப்பாட்டில் மாத்திரம் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசாங்கத்தின் ஒரே கொள்கை. மாகாண சபை முறைமை இறுதித் தீர்வு என நான் சொல்லவில்லை. அதை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேசி முடிக்க வேண்டும். ஆனால் ஏனைய எட்டு மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மாகாண சபை ஏன் வடக்கிற்கு மட்டும் இல்லை என நான் கேட்கிறேன். இப்படி நான் கோரிக்கை விடுப்பதைப் பார்த்து வார இறுதி அரசாங்க ஊடகம் ஒன்று, மனோ கணேசன் கூட்டமைப்பை பிடித்து வட மாகாண சபை முதலமைச்சராகத் திட்டம் போடுகிறார் எனக் கடந்த வாரம் எழுதியுள்ளது. இதைவிட நகைச்சுவை ஒன்றும் இல்லை. எனக்குக் கூட்டமைப்பும் வேண்டாம். முதலமைச்சர் பதவியும் வேண்டாம். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான்தான் கொழும்பின் முதல் அமைச்சர். வட மாகாண உடன் பிறப்புகள் படும் சொல்லொணா துன்பம் தீர வேண்டும். அதன் மூலம் நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் அமைதி ஏற்பட வேண்டும். இது ஒன்று மட்டுமே என் ஒரே எதிர்பார்ப்பு. ஜனாதிபதி தான் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவிடம் 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் என்ற திட்டத்தைப் பற்றி பேசினேனே தவிர அதற்கு தான் உடன் படவில்லை என்று சொல்லி முடித்து விட்டார். அத்துடன் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப் போவதாக சொல்கிறார். அதாவது மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே செல்வோம் என கூறுகிறார். அத்துடன் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளாமல் அடம் பிடிக்கிறது என்ற புகார் வேறு சொல்லப்படுகிறது. இத்தகைய எந்த ஓர் அடிப்படையும் இல்லாத சூழல் பின்னணியில் கூட்டமைப்பு எங்கே, எப்போது, எப்படி தெரிவுக்குழுவிலோ, அனைத்துக் கட்சிக் கூட்டத்திலோ கலந்து கொள்ள முடியும் என எங்களுக்கு விளங்கவில்லை. பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் பற்றி தென்னிலங்கையில் உரக்கப் பேசி சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் இன்று பீதியைக் கிளப்பி விட்டிருக்கின்றது. மறு பக்கத்தில் இப்போது இருக்கும் மாகாண சபையைக் கூட வடக்கில் நடத்துவதற்கு இடம் தராமல் வட மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. வழமை போல் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைக் கிளப்பி, புலி பூச்சாண்டியைக் காட்டி, தமது ஆட்சியைத் தொடர்ந்து கொண்டு செல்வது ஒன்று மட்டுமே இவர்களின் நோக்கம். இவை ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் செய்யும் வேலைகள் இல்லை என்பதை சிங்கள புத்தி ஜீவிகள் புரிந்து கொள்ள வேம்ண்டும். சிங்கள மக்களுக்கு தேசிய இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் பதில் தரப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுகொள்கிறேன். தென் இலங்கையின் எந்த மூலையிலும் வணக்கத்திற்குரிய தேரர் தலைமையில் இந்த இயக்கம் நடத்தும் எந்த ஒரு கூட்டத்திலும் வந்து சிங்கள மொழியில் பேசி சிங்கள சகோதர மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க நான் தயார் . இன்று புதிதாக அனைத்துக் கட்சிக்கூட்டம் என பேசும் அரசாங்கத்திற்கு, தான் நடத்திய அனைத்து கட்சி மாநாடு மறந்து விட்டதா? கடந்த காலங்களில் அல்ல, இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. எங்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளின் பங்களிப்பில் ஒரு முன்னேற்றகரமான அறிக்கை தயாரிக்கப்பட்டது. பெரும்பான்மை அறிக்கை என்று அழைக்கப்படும் அந்த அறிக்கை உட்பட அனைத்து கட்சி மாநாட்டு ஆவணத்தை அமைச்சர் திஸ்ஸ விதாரண ஜனாதிபதியிடம் நேரடியாகக் கையளித்தார். இப்போது அந்த அறிக்கை எங்கே? இந்த அரசாங்கமே நடத்தி முடித்த அனைத்து கட்சி மாநாட்டிற்கு என்ன நேர்ந்தது? இன்றைய தேவை தெரிவுக்குழு, அனைத்து கட்சி மாநாடு என்ற அமைப்பு ரீதியான இயந்திரங்கள் அல்ல. இன்றைய தேவை, குழுவிலோ, மாநாட்டிலோ பேசப்பட வேண்டிய விஷயங்களின் பொது அடிப்படை ஆகும். திஸ்ஸ விதாரண தயாரித்த பெரும்பான்மை அறிக்கையை இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக அறிவிக்குமா எனக் கேட்க விரும்புகின்றேன். இது எதையும் செய்யாமல், எதுவும் தர தயாராகாமல், சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு, இனவாதத்தை கிளப்பி, தமது ஆட்சியை கொண்டு நடத்துவதுதான் இன்றைய அரசாங்கத்தின் நோக்கம் ஆகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’