ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் பொதுநலவாய நாடாளுமன்றத் தலைவருமான சேர் அலன் ஹார்சல் துறுஸ்ட் இருவரும் இன்று (17) காலை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி தேவைகள் குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் தற்போதைய தேவைகள் அவர்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார். அத்தோடு வடபகுதி மக்களுக்கு பிரித்தானிய அரசு செய்துவரும் உதவிகளுக்கும் வடபகுதி மக்களின் சார்பாக நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு போன்ற விடயங்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை இலங்கையிலும் பிரித்தானியாவிலும் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமைகள் பொறுப்புக்கள் நிர்வாக ரீதியிலான கட்டமைப்புக்கள் மற்றும் ஒற்றுமை வேற்றுமை தொடர்பில் இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
அத்தோடு தற்போதைய சூழலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பலர் வடபகுதியில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளமையினையும் எதிர்காலத்தில் அவ்வாறு பலர் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதனை அரசு வரவேற்கத் தயாராகவுள்ளது என்ற செய்தியினையும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பதிகாரி ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’