இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து சிவில் சமூகத்தினருக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நடைபெற்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் தலைமையிலான சிவில் சமூகத்தினர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பு மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது. அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகின. இதில் பேசப்பட்ட விடயங்கள், பேச்சுக்களின் முன்னேற்றம், பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை விடயங்கள் என்பன குறித்து சிவில் சமூகத்தினர் சந்தேகம் வெளியிட்டு, அதற்கான விளக்கம் கோரி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களை முதன்மையாகக் கொண்டு, சமூகத்தின் பல்வேறு துறைகளையும் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்டோர் இதில் கையெழுத்திட்டிருந்தனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையைத் கைவிட்டு விட்டு சமவுரிமைகளுக்காகத்தான் பேச்சுக்களை நடத்துகின்றதா என்ற கேள்வி இக்கடிதத்தில் முக்கியமாக எழுப்பப்பட்டிருந்தது. அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்குபற்றினால், மாகாண சபை முறையைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என கருதப்படும். ஆகவே கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் நேரடியாகப் பங்கு பற்றக் கூடாது என்றும் அவசியமானால் மாற்று வழிகள் குறித்து அது மக்களுடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத வடமாகாண தேர்தல் குறித்து முன்கூட்டியே தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களின் உண்மை நிலைமை குறித்து சிவில் சமூகத்தினரை நேரடியாகச் சந்தித்து விளக்கமளிக்க முடியும் என தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இன்றைய சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை சிவில் சமூகத்தினரின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமக்கு விளக்கமளித்திருந்ததாகவும், இன்றைய சந்திப்பின் நோக்கம் நிறைவேறியிருப்பதாகவும் கூறினார். நீண்ட காலமாக நிலவி வருகின்ற அரசியல் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்பதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சிவில் சமூகத்தினர் பக்கபலமாக இருப்பார்கள் என்றும் மன்னார் ஆயர் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்திருந்தது எனக் கூறிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வெறும் கோஷங்களுக்காகத் தாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ''நாங்கள் எதனை பெறப்போகின்றோம் என்பதுதான் முக்கியம். எமது மக்கள் உண்மையான சுயாட்சியைப் பெறவேண்டும் என்பதுதான் சுயநிர்ணய உரிமை என்பதன் உண்மையான விளக்கம். நாங்கள் சுலோகங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இன்று சிவில் சமூகத்தைச் சந்தித்ததும் இதன் அடிப்படையில்தான்'' என்றார் இரா.சம்பந்தன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’