காணி, பொலிஸ் அதிகாரங்களால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று தேசிய பிக்குகள் முன்னணி தலைவர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். அவரது மடமைத்தனத்தை அக்கருத்து வெளிப்படுத்துகிறது. அதிகாரப் பகிர்வு வழங்கப்படாவிட்டால் தான் இந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்' என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 'காணி, பொலிஸ் அதிகாரங்களை தமிழ் மக்கள் கோரவில்லை எனவும் அரசியல்வாதிகளே கேட்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது. மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் மக்களின் நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றோம் என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். 13ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக எதிர்க்கும் அவர், தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, கல்வி போன்ற அபிவிருத்திகளே என்று தெரிவித்திருக்கின்றார். நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. அந்த அபிவிருத்தி எமது தமிழ் அரசியல் தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் நடைபெற வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகின்றோம். தமிழ் மக்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொடுக்கும் போது சிங்கள முஸ்லிம் மக்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருப்பது அவரது அரசியல் ஞான சூனியத்தை வெளிப்படுத்துகிறது. 13ஆம் திருத்த சட்டம் அல்லது அதற்கு அப்பால் தீர்வு காணும்; போது அனைத்து மாகாணசபைகளுக்கும் இவை கிடைக்கும் என்பதை இவர் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் அறிவற்று, தமிழ் மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளாமல் இனவாதத்தை கக்கியதன் காரணமாகத்தான் கடந்த 30 வருடகாலமாக சிங்கள மக்களும் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள் என்பதை இவர் தெரிந்துகொள்ள வேண்டும். 13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் தீர்வினையே நாம் அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பார்க்கின்றோம். அரசாங்கமும் தீர்வினில் அக்கறை செலுத்தாததை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் இவர் போன்றவர்களின் இனவாத போக்கினை அரசாங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஜனாதிபதியின் கனவு பிழையாகிவிடும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’