வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஜனவரி, 2012

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வடபகுதிக்கான விஜயம்!


டபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அவர்கள் கிளிநொச்சியில் இன்று காலை மாவட்ட வைத்தியசாலைக்கான உபகரணங்களை கையளித்தார். இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட சிவபாதக் கலையகத்தை திறந்து வைத்ததுடன் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை உரியவர்களிடம் கையளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 29 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை அதன் நிர்வாகத்திடம் சம்பிரதாயப் பூர்வமாக கையளித்தார். இதேவேளை யுத்தத்தினால் பலத்த சேதடைந்த கிளிநொச்சி சிவபாதக் கலையகம் இந்திய அரசின் நிதியுதவியுடன் மீள்புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் அதன் திறப்பு விழா இன்று இடம்பெற்றுள்ளது. பெயர்ப்பலகையினை கிருஸ்ணா அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் நாடாவை வெட்டி கலையகத்தைத் திறந்து வைத்தார். அத்துடன் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் அவற்றின் உரிமங்களை உரிமையாளர்களிடம் இதன் போது கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸவரன் உள்ளிட்ட திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். சிவபாதக் கலையரங்கத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புரையாற்றும் போது இந்திய வெளியுறவு அமைச்சர் கௌரவ எஸ்.எம். கிருஷ்ணா அவர்களது வருகையால் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. காரணம் இந்தியா எமது அயலக நட்பு நாடு. அரசியல் வரலாற்று மற்றும் பூகோள ரீதியில் இலங்கைத்தீவோடும் ஈழத்தமிழ் மக்களோடும் பின்னிப்பிணைந்த நாடு. ஆகவே இந்திய வெளியுறவு அமைச்சர் திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்களது வருகை எமது அரசாங்கத்திற்கு மட்டுமன்றி எமது மக்களுக்கும் மிகவும் பயனுள்ள முக்கியத்துவம் வாய்ந்த வருகையாகும். ஆகவே எமது அரசாங்கத்தின் சார்பாகவும் தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் நான் அவரை நேசக்கரம் நீட்டி நன்றியோடு வரவேற்கின்றேன். கடந்து போன எமது வரலாற்றுக்காலங்களில் பல தடவைகள் இந்தியாவின் நேசக்கரங்கள் ஈழத்தமிழ் மக்களை நோக்கி நீண்டிருக்கின்றன. ஆனாலும் அவைகள் யாவும் கடந்த கால தமிழ் அரசியல் தலைமைகளால் உதாசீனம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நல்லெண்ண செயற்பாடுகள் பலவும் அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைத்திருந்த சக தமிழ்த் தலைமைகளால் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற அரியதொரு வாய்ப்பை ஏற்று செயற்பட்டிருந்தால் அல்லது சரிவரப் பயன்படுத்தியிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இத்தனை அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது. இந்த நாட்டில் அழிவு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பிந்திய காலத்திலும் சரி நாம் தொடர்ச்சியாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து தொடங்கி எமது அரசியல் இலக்கை எட்டி விட முடியும் என்றே வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இந்தியாவும் அதையே வலியுறுத்தியும் விரும்பியும் வந்திருக்கின்றது. ஆனாலும் அதை ஏனைய தமிழ்த் தரப்பினர் அரைகுறைத்தீர்வு என்றும் ஒன்றுக்கும் உதவாது என்றும் முழுமையாக நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். இவை எமது அயலக நட்பு நாடாகிய இந்திய அரசின் நல்லெண்ண முயற்சிகளை உதாசீனம் செய்து கொண்ட நிகழ்வுகளாகும். இதே வேளை தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டமைக்கும் இவையே காரணங்களாகும். அதற்காக எனது மனத்துயரங்களை நான் இந்திய வெளியுறவு அமைச்சர் திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்களிடம் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த நாட்டில் ஓர் அழிவு யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. ஆனாலும் யுத்தத்திற்கு பிந்திய சூழல் பல முன்னேற்றகரமான மாற்றங்களைக் கண்டு வருகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிறந்த வழி நடத்தலாலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களது செயற்திறனாலும் வட மாகாண ஆளுனர் திரு சந்திரசிறி அவர்களது ஒத்துழைப்பினாலும் நாம் பல மாற்றங்களை இங்கு உருவாக்கிவர முடிகிறது. குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றங்கள் நடந்திருக்கின்றன. இதற்காக வடக்கு பிரதேசத்தில் ஏறத்தாழ 4000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 3 46 621 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளன. இன்னமும் எஞ்சியுள்ள மக்களும் விரைவாக மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக நாம் உழைத்து வருகின்றோம். இதே வேளை மீளக்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை மேலும் உருவாக்குவதன் மூலம் அவர்களது மீள்குடியேற்றங்களை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கும் உழைத்து வருகின்றோம். இதில் ஐம்பதினாயிரம் வீட்டுத்திட்டத்தை எமது மக்களுக்காக இந்தியா அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளமைக்காக நான் இந்த இடத்தில் மீண்டும் எமது மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். இலங்கை இந்திய அரசுகள் இதற்கு உடன்பட்டிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ஒப்பந்தக்காரர்களின் பிரச்சினைகளால் இந்த வீடமைப்பு நிர்மாண வேலைகளில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் அமைக்கப்படவிருக்கும் எஞ்சிய வீடுகளுக்கான நிதியினை பயனாளிகளுக்கு நேரடியாகவே வழங்குவது என இரு நாடுகளும் எடுத்துக் கொண்ட தீர்மானம் குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். யுத்தத்திற்கு பிந்திய சூழலில் யுத்த காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டவர்களில் சுமார் பத்தாயிரத்தித்திற்கும் அதிகமானவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார்கள். எஞ்சியுள்ள ஏனையவர்களும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படுவார்கள். இந்த முயற்சிகளை எடுத்து வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்களோடு நாம் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். இருண்டதொரு யுகத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட எமது மக்கள் தமது வாழ்வியல் உரிமைகளை மட்டுமன்றி அரசியல் உரிமைகளையும் பெற்று நிமிர வேண்டும். சமூக, பொருளாதார வளர்ச்சியில் எமது மக்கள் தன்னிறைவு காண வேண்டும். சகல தொழிற்றுறைகளும் வளர்ந்து செழித்து எமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். எமது மக்களின் கல்வி சுகாதாரம் போக்குவரத்து கடற்றொழில் விவசாயம் கிராமியத்தொழிற் துறைகள் சிறுகைத்தொழில் மற்றும் சுயபொருளாதார உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்காக அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன். இது குறித்து அரசாங்கம் முன்னேற்றகரமான விடயங்களை தொடர்ந்தும் சாதித்து வருகின்றது. இதனால் யுத்தத்திற்கு பிந்திய சூழல் பல மாற்றங்களைக் கண்டு வருகின்றது. இத்தகைய மாற்றங்களை உருவாக்கி தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வளப்படுத்தும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் இந்தியா தொடர்ந்தும் உதவ வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். உலக அரங்கில் இருந்து எத்தனை நாடுகள் எமது நட்பு நாடி வந்தாலும் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையிலான நேச உறவில் மட்டுமே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வும் தங்கியுள்ளது. ஆகவே நாம் இலங்கை இந்திய நட்புறவை பாதுகாக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தாய் சேய் உறவை பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்தியாவை பகைத்துக் கொண்டதால் நாம் பட்ட துயர்களும் வலிகளும் வதைகளும் ஏராளமானவை. தவறான தலைமைகளின் சுயலாப வழிமுறைகளால் நடந்த அழிவுகளும் அவலங்களும் சொல்லித்தீராதவை. இந்த அனுபவங்களைக் கற்றுக்கொண்ட பின்னரும் இந்தியாவை நம்பக்கூடாது என்ற அர்த்தமற்ற பரப்புரைகளை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். ஒரு புறத்தில் இந்தியா எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு மறு புறத்தில் இந்தியாவை நம்பக்கூடாது என்று தமது ஊடகங்களில் பரப்புரைகள் செய்து வருவது கவலைக்குரிய விடயமாகும். உண்மையாகவே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காலம் கடந்தாவது இலங்கை - இந்திய ஒப்பந்தம் குறித்த விடயங்களையே அரசாங்கத்துடன் பேசி வருவது ஆரோக்கியமான விடயமாகும். ஆனாலும் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அவர்கள் நிராகரித்திருப்பது பாதகமான ஒரு விடயம் என்றே நான் எண்ணுகின்றேன். 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் இருந்து ஆரம்பித்து அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக இங்கு வந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா அவர்களிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உறுதி அளித்துள்ளதாக நான் அறிகின்றேன். இதே போல் அரசுடனான பேச்சுவார்த்தை ஊடாகவும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவும் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என இந்தியா நம்புவதாக எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் தெரித்திருப்பதாகவும் நான் அறிகின்றேன். இது குறித்து நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா அவர்கள் ஊடாக இந்திய அரசுக்கும் தமிழ் பேசும் மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். அரசாங்கத்துடன் நாம் எந்தளவிற்கு நம்பிக்கையோடும் உண்மைத் தன்மையோடும் பேசுகின்றோமோ அந்தளவிற்கு இங்கு விரைவான மாற்றங்கள் நிகழும். மாறி வந்திருக்கும் உலகத்தின் போக்கை உணர்ந்து மனந்திறந்த உரையாடலை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக நிகழ்த்துவதன் ஊடாக நாம் எமது மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கு விரைவான தீர்வைப் பெற்று விட முடியும். ஆகவே அரசாங்கத்துடன் சக தமிழ்த் தலைமைகளும் இணக்கமாக பேசி அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஆரோக்கியமானதொரு தளத்தை உருவாக்குவதற்கு இந்தியா தனது அறிவுரைகளை சக தமிழ்த் தலைமைகளுக்கு வழங்க வேண்டும். இதே வேளை அழிந்து போன எமது மக்களின் வாழ்விடங்களை மேலும் தூக்கி நிறுத்தவும் அபிவிருத்தியில் எமது வரலாற்று வாழ்விடங்கள் புதுப்பொலிவுடன் எழுந்து நிமிரவும் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு இலங்கைத்தீவில் வாழுகின்ற சகல மக்களும் சரிநிகர் சமன் என சுதந்திர பிரஜைகளாக வாழவும் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இந்திய அரசு தனது பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கும் என்றும் நான் எதிர்பார்க்கின்றேன். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவர்களுக்கு ஊடாக இந்த வேண்டுகோளை நான் எமது நட்பு நாடாகிய இந்திய அரசை நோக்கி விடுக்கின்றேன்.













































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’