ஜெயலலிதாவால் மட்டும் அல்ல இயற்கையைத் தவிர வேறு யாராலும் தன்னை சாய்க்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: கருணாநிதி என்னும் தீய சக்தியை வேரோடு சாய்த்த; யாராலும் வெல்லவே முடியாத கட்சி ஜெயலலிதாவின் அதிமுக என்று அவர் தனது அறிக்கையில் உங்கள் மீது நெருப்பைக் கொட்டியிருக்கிறாரே? பதில்: வெற்றி, தோல்வி மாறி, மாறி வரக் கூடியவை. எம்.ஜி.ஆர்., காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஜெயலலிதா அ.தி.மு.க.,வுக்கு தலைமையேற்ற பின், 1996 மற்றும் 2006லும் சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்விகளைச் சந்தித்துள்ளது. பர்கூர் தொகுதியில், ஜெயலலிதாவும் தோல்வியடைந்துள்ளார். எனவே, அ.தி.மு.கவை யாராலும் சாய்க்க முடியாது என ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது. என்னை, வேரோடு சாய்த்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மட்டும் அல்ல, இயற்கையைத் தவிர வேறு யாராலும் சாய்க்க முடியாதவன் தான் கருணாநிதி. தேர்தல்களில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரக்கூடியது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அறிக்கையில் என்னை தீயசக்தி என்று எழுதியுள்ள ஜெயலலிதாவுக்கு நான் தரும் விளக்கம் - என்னைப் பற்றி தந்தை பெரியார் கூறியதை ஆனந்த விகடன் புகைப்பட ஆல்பம் ஒன்றில் 130ம் பக்கத்தில் நமது முதல்வர் கருணாநிதி தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்த ஒரு நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் நடைபெறுகிற ஆட்சியாவும் நம்பிக்கையாளர் ஆட்சி ஆகும். நம் நாட்டில் மட்டும்தான் பகுத்தறிவாளர் ஆட்சி நடைபெறுகிறது. இத்தகைய பகுத்தறிவாளராகவும், ஆட்சிக்கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன் யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புது வாழ்வு தருபவராகிறார் என்று கூறியதைப் பெருந்தன்மையுடன் பிரசுரித்திருக்கிறார்கள். என்னைப் பற்றி அண்ணா, என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்தில் இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச்சிறந்த இடமுண்டு என்று குறிப்பிட்டதையும் வெளியிட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி, கருணாநிதிக்கும், எனக்கும் 20 ஆண்டுகளாக தொடர்புண்டு. அப்போது நான் கோவையில் இருந்தேன். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம்தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது. கருணாநிதி இன்று முதல்லராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்கு பெருமையும், புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்த பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பிருந்தே பேருக்கும், புகழுக்கும் உரியவராக இருப்பவர் கருணாநிதி. நான் முதன் முதலாகப் பெற்ற பட்டம் புரட்சி நடிகர் பட்டம். அந்த பட்டத்தை எனக்கு முதன்முதலாக தந்து பாராட்டியவர் இன்று கழக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருக்கும் கருணாநிதி. அன்றே எனக்கு பட்டம் தரும் அளவுக்கு தகுதி படைத்திருந்த அவரிடம் நான் என் தோல்வியை ஒப்புக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியதை வெளியிட்டிருக்கிறார்கள். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய இந்த மூன்று தலைவர்களின் கருத்துக்களை தமிழ் மக்கள் படித்துப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்வார்கள். தாய்த் தமிழகத்திற்காகவும், தாய்மொழி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் என் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, எண்ணற்ற தியாகங்களைச் செய்து, சிறைச்சாலைகளுக்குச் சென்று இன்றளவும் தமிழ் மக்களுக்காகவும், ஜனநாயகம் காப்பதற்காகவும் உழைத்துக் கொண்டிருப்பவன்தான் கருணாநிதி!. எனவே, என்னைப் பற்றி ஜெயலலிதா கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ’என் குடும்பம், என் மனைவி, என் மக்கள்’ என்று சுயநலமியாக நான் உள்ளேன் என, ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால், ’எனக்கு எல்லாமே என் உடற்பிறவா தோழிதான்’ என, கூறிவிட்டு, கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல. கேள்வி: நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.6,654 கோடி ரூபாயையும், அதில் முதல்கட்டமாக ரூ.757 கோடியையும் ஒதுக்கீடு செய்து ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக நாளேடுகளில் பெரிய அளவில் செய்தி வந்திருக்கிறதே? பதில்: ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, 4-8-2011 அன்று பேரவையில் படித்த நிதி நிலை அறிக்கையிலேயே பக்கம் 66ல், பத்தி 111ல், திருத்த வரவுசெலவு திட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சித் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்திற்காக 750 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவ்வாறு அறிவித்ததைத்தான் தற்போது மீண்டும் ஏதோ ஒரு புதிய அறிவிப்பினைப் போல சொல்லியிருக்கிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 4ம் தேதியன்று நிதிநிலை அறிக்கையிலே செய்த அறிவிப்பு அரசாணையாக மாற இத்தனை மாதங்கள் ஆகியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், 5-2-2011 அன்று திமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த பேராசிரியரால் பேரவையில் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையிலேயே, பக்கம் 42ல், பத்தி 85ல் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூபாய் 1,414 கோடி அளவிற்கு 84 நகராட்சிகளில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டிருப்பதையும் மனதிலே கொண்டிட வேண்டும். பொதுவாக, அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையிலேதான் வெளியிடுவார்கள். அவ்வாறு நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புகளுக்கான அரசாணைகள் அதன் பின்னர் உடனடியாக ஒவ்வொன்றாக வெளியிடப்படும். கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புகளுக்கான அரசாணைகள்தான் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை படிக்கப்படுவதற்கு முன் வெளி வரவே ஆரம்பித்துள்ளன. இவ்வாறு இப்போது அறிவிக்கப்படும் அறிவிப்புகளை இந்த இரண்டரை மாதங்களில் முடிக்கவே முடியாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’