கட்டார் உட்பட பல நாட்டு தலைவர்கள் அடுத்த வாரம் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். கட்டார் எமிர் ஷேக் ஹமாட் பின் கலீபா அல் தானி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதற் தடவையாக இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் கட்டார் எமிர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ண உள்ளிட்ட பல அரச முக்கியஸ்தர்களைச் சந்திக்கவுள்ளார். இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனவரி 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தினால் முதற் கட்டமாக கட்டப்பட்டுள்ள ஒரு தொகுதி வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தி.மு. ஜயரட்ன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட பல அரச முக்கியஸ்தர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இந்த விஜயத்தின் போது எஸ்.எம். கிருஷ்ணா சந்திக்கவுள்ளார். இதேவேளை, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்கள் தங்கியிருக்கவுள்ள அப்துல் கலாம், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இந்திய கலை மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் அப்துல்கலாம் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’