தாம் பாதாள உலகக் குழு அங்கத்தவர்கள் எனவும் செல்வந்த வர்த்தகர் ஒருவரின் மகனை கொலை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிக்கொண்டு அவ்வர்த்தகரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாடசாலை மாணவர்களான 17 வயது இளைஞர்கள் இருவரை கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சர்வதேச பாடசாலையொன்றின் மாணவரான, மேற்படி வர்த்தகரின் மகனை கொல்வதற்காக தாம் 50 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தில் உள்ளதாகவும் வர்தகரிடமும் அவரின் மனைவியிடமும் மேற்படி இளைஞர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். தமக்கு 3 லட்சம் ரூபா வழங்கப்பட்டால் வர்த்தகரின் 15 வயது மகனுக்கு தீங்கேதும் செய்யாமலிருக்கத் தயார் என மேற்படி இளைஞர்கள் கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மொரட்டுவையிலுள்ள முன்னிலை பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்களான மேற்படி இரு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர். இம்மாணவர்கள் க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் ஜேர்மனியில் நடைபெற்ற 1500 ஓட்டப்போட்டியில் தனது பாடசாலை சார்பாக பங்குபற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் இப்பெற்றோர், லுனாவையிலுள்ள இடமொன்றில் பணத்தை பெறுவதற்கு வருமாறு மேற்படி இளைஞர்களை அழைத்தனர். இவ்விளைஞர்கள் அங்கு வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’