சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துடன் ஒத்துப் போகவே முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பிலுள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான விடயமாகும் என்று தெரிவித்துள்ள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உண்மையான நோக்கமும் அக்கறையும் அரசுக்கு இருக்குமேயானால் உடனடியாக கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. செனற் சபை என்றால் என்ன? அதனூடாக அரசாங்கம் எதனை சாதிக்கப் போகின்றது என்றும் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்புச் சட்டமானது நாட்டின் தேவை கருதி உருவாக்கப்பட்ட மூலச்சட்டமாகும். இது அவ்வப்போது திருத்தங்களுக்கும் உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவரையில் எமது நாட்டு அரசியலமைப்பில் 18 தடவைகள் திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியானாலும் சரி அமைச்சர்களானாலும் சரி எவராக இருந்தாலும் தாம் பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் அரசியலமைப்பினைப் பேணிப் பாதுகாப்பதாகவும் அதன் பிரகாரம் ஒழுகுவதாகவும் கூறியே பதவிக்கு வருகின்றனர். அமைச்சர் கெஹெலிய இதற்கு விதிவிலக்காகி விட முடியாது. இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுதான் இருவரும் அமைச்சராகவுள்ளனர். எனவே ஜனாதிபதிக்கும் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவைக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் கடமையும் பொறுப்பும் இருப்பதை மறந்துவிட முடியாது. கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டது தான் 13ஆவது திருத்தமாகும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டதான திருத்தத்தை தவறானது என்றோ பிழையானது என்றோ கூற முடியாது. அத்துடன் மூலச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டில் குழப்பம் இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும் என்று கூறுவதானது முட்டாள் தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமான கருத்தாகும். அத்துடன் இது தவறான அதே நேரம் ஏற்கத்தகாத முன்னுதாரணமாகவும் இருக்கின்றது. உலகில் இல்லாத எந்தவொரு புதுமையான விடயத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுவிடவில்லை. உலகின் பல நாடுகளில் உள்ள மாதிரியான அதிகாரங்கள் தொடர்பிலேயே கோரிக்கைகளை முன் வைக்கின்றோம். காணி, பொலிஸ் அதிகாரங்கள் என்பன பல நாடுகளில் பகிரப்பட்டிருக்கின்றன. அந்த நாடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த வகையில் வடக்கு கிழக்கிற்கு நாம் அதிகாரங்களை எதிர்பார்க்கின்றோம். இவ்விடயத்தில் ஜனாதிபதியும் அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது விளையாட்டுத்தனமாகும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே மாகாண சபைகள் முழுமை பெறுவதாய் அமையும். இல்லையேல் மாகாண சபை முறைமைகளில் அர்த்தம் இருக்காது. தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகுதி பகுதியாகவே இருக்கின்றன. இவ்வாறு உள்ள அதிகாரங்கள் எவ்வேளையிலும் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக் கொள்ளப்படலாம். அவ்வாறு நிகழாது இருப்பதற்குத்தான் இந்த அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்கின்றோம். இதனை வலியுறுத்தியே இதுவரையில் பேச்சுக்களையும் நடத்தி வந்தோம். 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்பதாகவே இந்திய முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி எமது தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வடக்கு,கிழக்கிற்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். எனவே 13ஆவது திருத்தம் முற்றாக அமுல்படுத்தப்பட வேண்டும். இன்று அரசு 13 பிளஸ் என்று கூறித் திரிகின்றது. அத்துடன் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் கூறுகின்றது. 13 பிளஸ் என்கின்ற அர்த்தமானது நாம் ஏற்கெனவே கூறியது போன்று 13 ஆவது திருத்தம் மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக் கொள்ள முடியாதவாறு அதிகாரங்கள் அமுல்படுத்தப்படுவதற்கான வரைவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும். இதனை இல்லாது செய்வதற்காகவே செனற் சபை என்ற தெளிவற்ற திட்டத்தை அரசு கொண்டு வருகின்றது. செனற் சபை என்றால் என்ன என்றும் அதனால் சாதிக்கப் போவது என்ன என்பதும் இதுவரையில் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. இதனை சுருக்கமாகக் கூறின் இது ஓர் ஏமாற்றுத்தனமாகும். தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்தியாவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான திட்டமே இந்த செனற் சபையாகும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் நாம் அக்கறையாக இருக்கின்றோம். எனினும் அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சிகரமான திட்டங்களுடன் ஒத்துப்போக தமிழ் மக்கள் தயாரில்லை. இதுவரை கால போராட்டங்களும் நீண்ட கால எதிர்பார்ப்புகளும் இதற்கானதல்ல. நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், தீர்வு ஒன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு உண்மையான நோக்கமும் அக்கறையும் இருக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளை இதய சுத்தியுடன் முன்னெடுத்து தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’