இன அழிப்பு, நிலப் பறிப்பு இவற்றை தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கிறது. புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார் தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் பிரதேச கலாசார நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 15 தடவைகள் அரசுடன் பேசியிருக்கிறார்கள். இவ்வளவு காலமாக என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. அது அரியநேத்திரன் ஐயாவுக்குத் தெரியுமா? மக்களாகிய உங்களுக்குத் தெரியுமா? இல்லை. மக்களுக்கு எந்த விடயங்கள் குறித்துப் பேசுகிறார்கள் என்பது பற்றி அறிவிக்கவில்லை. தந்தை செல்வாவின் வழியில் அரசியல் செய்கிறோம் கொள்கைக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்கிறார்கள். அரசியல் தீர்வுகுறித்து என்ன திட்டத்தினை வைத்திருக்கிறார்கள்? 'சி.எம்.(முதலமைச்சர்) அபிவிருத்தி என்றுகொண்டு திரிகிறார். அரசியல் தீர்வு விடயத்தில் எந்தவிதமான அக்கறையும் இன்றி பின்னுக்கு நிற்கிறார்' என்று த.தே.கூட்டமைப்பு சொல்கிறது. இதுவரை நாங்கள் படித்த தந்தை செல்வாவின் வரலாறு என்று பார்த்தால் இரண்டு ஒப்பந்தங்களைச் சொல்வார்கள். அவை பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தமாகும். இதில் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைப் பார்த்தீர்களென்றால் அது மாவட்ட சபையைப் பற்றிச் சொல்கிறது. ஆகக் குறைந்த அதிகாரம் கொண்டது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் அதனைவிடவும் மிக மிக அதிகமானது. 77ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எடுத்து பார்த்தீர்களென்றால் பைத்தியம் பிடிக்கும். வட்டுக் கோட்டை தீர்மானத்தை எடுத்து விட்டு தமிழ், முஸ்லிம்களுக்கும் சம பங்கு, சுவிட்ஸர்லாந்தைப் போல சமஷ்டியாம். எல்லோரும் தேர்தல் விஞ்ஞாபனம் விடுவார்கள் தான். அவ்வளவு எழுதிவிட்டு நடத்தின நாடகம் எல்லாவற்றையும் செய்துவிட்டு அவர்களது வாரிசாக இருக்கிற சம்பந்தன் ஐயா போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. தொடர்ந்தும் மக்களை அழிப்பதற்கு துணைபோகமுடியாது. ஒரு தலைவர் பிழைவிட்டால் அது அவர்களுக்குப்பிரச்சினை இல்லை. எங்களது சமூகத்துக்குப் பிரச்சினை. இதற்கு விடமுடியாது. காசியானந்தன் மீண்டும் புலி வரும், மீண்டும் வெடி வெடிக்கும், மீண்டும் தமிழீழம் வரும் என்று பேசியிருக்கிறார். இவ்வாறு பேசிவிட்டு நாடுகடந்த தமிழீழத்தார் பணம் போடுவார்கள், அவர்களுடைய வங்கிக் கணக்குகளை நிறைவேற்றிக் கொண்டு இருப்பதற்கு நினைக்கின்றனர். கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் நமக்கு தனித்துவமான அரசியல் தேவை. அதற்கான தலைமைகள் தேவை என்பதே எமது நோக்கம். மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தல்களிலே எங்களை வெற்றிபெறச் செய்து பாருங்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றித் தருகிறேனா இல்லையா என்று. இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே கல் எறிந்து கொல்லுங்கள் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’