யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடம்பெயர்ந்த 328 குடும்பங்களைச் சேர்ந்த 1,315 பேர் தற்காலிகக்கூடாரங்களிலும் கோயில்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபனி வரதலிங்கம் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் ஜே. 89 கிராம அலுவலகர் பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 682 பேரும் ஜே. 109 கிராம அலுவலகர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர். காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஜே. 42 கிராம அலுவலகர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேரும் ஜே. 44 கிராம அலுவலகர் பிரிவில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரும் ஜே. 47 கிராம அலுவலகர் பிரிவில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 169 பேரும் ஜே. 48 கிராம அலுவலகர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர். மணியந்தோட்டம், பூம்புகர், நாவற்குளி, மருதங்கேணி ஆகிய பிரதேசங்களிலும்; மக்கள் குடியிருப்புக்களுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் இப்பகுதி மக்களுக்கு ஒரு வாரத்திற்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மருதங்கேணிப் பிரதேசத்தில் மக்கள் தற்போது வெளியேறிக் கொண்டிருப்பதினால் இவர்களின் இடம்பெயர்வு பற்றிய கணிப்புக் கிடைக்கவில்லையெனவும் யாழ். மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’