காவிரி நதிநீர் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் உத்தரவு குறித்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு நாளை அவசர அவசரமாக விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை ரவீந்திரன், பட்னாயக் மற்றும் கோகலே ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது.
இந்த மனு நாளையே விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என முன்னதாக தமிழக அரசின் வழக்கறிஞர் கேட்டிருந்தார். அதற்கு என்ன அவசரம் என்று நீதிபதி ரவீந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், "இதற்கான அவசர அவசியம் இப்போது வந்திருப்பதாக தமிழக அரசு கருதுவதால் விரைவிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே, இந்த இடைக்கால மனு மற்றும் சிறப்பு விடுப்பு மனு விசாரணையை தமிழக அரசுதான் துரிதப்படுத்தியுள்ளது. இந் நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வேளாண் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணிச் செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேறே்றனர். இந்த வழக்கு அக்டோபர் 3வது வாரத்தில் வரவிருந்தது. ஆனால் ஒரு வாரம் முன்னதாகவே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக முதல்வர் ஜெயலலிதா இந்த வாரத்தில் பெங்களூருக்கு போக வேண்டிய கட்டாயம் உள்ளது நினைவுகூறத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’