வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 அக்டோபர், 2011

சில்ப - 2011 கண்காட்சியும் விற்பனையும் தொடர்பான ஊடக மாநாடு!


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இம்மாதம் 27 28 29 30ம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சிறீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சியகத்தில் நடைபெறவுள்ள சில்ப - 2011 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் மாநாடு இன்றைய தினம் (19) கொழும்பு தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது நாட்டின் பொருளாதாரத் துறையின் வளர்ச்சிக்கு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையானது பாரிய பங்களிப்பினை நல்கி வருவதால் இத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதற்கேற்ப எமது அமைச்சு திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த கால யுத்தச் சூழல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரம்பரிய கைத்தொழில்கள் பல அழிவுற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால் அவற்றை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் கடன் வசதிகளையும் வழங்கி தனது அமைச்சு பாரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதை உணர்த்திய அமைச்சர் அவர்கள் இதேபோன்று நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பாரம்பரிய கைத்தொழில்கள் யாவற்றையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தவகையில் பாரம்பரிய கைப்பணித்துறை சார்ந்தவர்களினதும் சிறிய மற்றும் நடுத்தர பரிமாண தொழில் முயற்சியாளர்களினதும் புதிய வடிவங்களையும் புதிய உற்பத்திகளையும் மாவட்ட மாகாண மற்றும் தேசிய அளவில் தெரிவு செய்து அவற்றை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வருடந்தோறும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்கு இக் கண்காட்சி பாரிய பங்களிப்பினை வழங்கி வருவதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். இக்கண்காட்சியானது உற்பத்திகளையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் பிரபல்யப்படுத்துவது மாத்திரமன்றி இத்தொழில் சார் முயற்சியாளர்களுக்கு நல்லதொரு விற்பனைச் சந்தையினையும் பெற்றுக் கொடுப்பதன் மூலம் இவர்களது ஜீவனோபாயத்திற்கும் மிக்க பலம் சேர்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஊடகங்கள் இச்செய்தியினை அனைத்து மக்களுக்கும் எட்டச் செய்வதன் மூலம் இத்துறைசார்ந்தவர்களைப் பலப்படுத்தி எமது பொருளாதார மேம்பாட்டுக்கும் அதேநேரம் இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பங்களிப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். இம்மாநாட்டில் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபைத் தலைவர் உதய சிறி காரியவசம் தேசிய வடிவமைப்புச் சபைத் தலைவர் மாசல் ஜனதா தேசிய அருங்கலைகள் பேரவையின் பணிப்பாளர் பூலோகசிங்கம் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர். இக்கண்காட்சி தொடர்பிலான மேலதிக விபரங்கள் வருமாறு தேசிய கைத்தொழிலாளர்களது சுமார் 1500 பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கங்கள் 1. தேசிய கலைஞர்களை - கைப்பணியாளர்களை இனங்காணுதல் அவர்களது படைப்புகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இக்கலைஞர்களை உருவாக்குதல். 2. சிறந்த தேசிய படைப்புக்களையும் படைப்பாளிகளையும் தேசிய மற்றும் சர்வதேச உல்லாசப் பிரயாண நிறுவனங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அறிமுகம் செய்தல். இதனூடாக இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல். 3. தேசிய மற்றும் சர்வதேச கொள்வனவாளர்களை அறிமுகப்படுத்தி நிலையான விற்பனைச் சந்தையை கட்டி எழுப்புதல். 4. தேசிய ரீதியில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளின் தரத்தை மேம்படுத்தல் மதிப்பிடல் மற்றும் படைப்புக்களை உருவாக்கும் முகமாக ஊக்குவித்தல். 5. களைஞர்களது படைப்புக்களை தலைநகர் சார்ந்த வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ள வாய்ப்பளித்தல். 6. கலைஞர்களது படைப்புக்களை பிரதேச வாயிலாகப் போட்டிக்கு உட்படுத்தி நல்ல படைப்புகளுக்கென தகுதிச் சான்றிதழ்களும் பணப் பரிசில்களும் வழங்கி அவர்களது படைப்புகளுக்கு மதிப்பளித்தல். மேற்படி கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தைக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்புச் சபை, பனை அபிவிருத்திச் சபை கித்துள் உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் என்பன பங்களிப்புக்களை வழங்குகின்றன. தேசிய அருங்கலைகள் பேரவை கைப்பணித்துறை சார்ந்து பாரிய பங்களிப்புக்களை வழங்கி வருகிறது. மாகாண சபைகளுடன் இணைந்து மாகாண மட்டத்தில் 19 கைப்பணித் துறைகள் சார்ந்து முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துக் கொள்கின்ற படைப்புக்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு வருகிறது. இந்தப் படைப்புகளுக்கு தேசிய மட்டத்தில் விருதுகளை வழங்கி மதிப்பளிக்கிறது. அதே நேரம் முதலாவது பரிசாக 50 000 ரூபாவையும் இரண்டாவது பரிசாக 30 000 ரூபாவையும் மூன்றாவது பரிசாக 20,000 ரூபாவையும் தேசிய விருதாக 10 000 ரூபாவையும் பணப் பரிசில்களாகவும் வழங்கி வருகிறது. அத்துடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் சிறிய மற்றும் நடுத்தர பரிமாணங்களைக் கொண்ட கைத்தொழிலாளர்களது திறமைகளை மதிப்பிட்டு மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் போட்டிகளை நடாத்தி விருதுகளையும், பணப் பரிசில்களையும் வழங்கி வருகிறது. அதே நேரம் தேசிய வடிவமைப்புச் சபையும் பனை அபிவிருத்திச் சபையும் தங்களது படைப்புக்கள் பலதை காட்சிப்படுத்துகின்றன. இம்முறை இக் கண்காட்சியில் பல்வேறு கைப்பணி மற்றும் கைத்தொழில்கள் சார்ந்த 200 காட்சிக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’